இந்தியாவில் ISIS பயங்கரவாத நெட்ஒர்க்: மகாராஷ்டிரா, கர்நாடகாவில் பெரும் சோதனையை நடத்தி வரும் பயங்கரவாத எதிர்ப்பு குழு
ISIS பயங்கரவாத தொகுதி வழக்கு தொடர்பாக இன்று காலை மகாராஷ்டிராவில் உள்ள 40 இடங்களில் சோதனை நடத்திய மத்திய பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பு, 15 பேரை கைது செய்தது. அதே நேரத்தில், இதே வழக்கு தொடர்பாக கர்நாடகாவில் தேசிய புலனாய்வு அமைப்பு சோதனை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிராவில் தானே, புனே, மீரா பயந்தர் உள்ளிட்ட 40 வெவ்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தானே ரூரல் பகுதியை சேர்ந்த 31 இடங்களிலும், தானே நகரத்தை சேர்ந்த 9 இடங்களிலும், புனேவில் இரண்டு இடங்களிலும், மீரா பயந்தரில் ஒரு இடத்திலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
பயங்கரவாத சித்தாந்தங்களை இந்திய மண்ணில் பரப்பும் குழு
ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத தொகுதி வழக்கின் ஒரு பகுதியாக வெடிபொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டதற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் ஆக்கிஃப் அதீக் நாச்சன் என்பவர் கைது செய்யப்பட்டார். ISIS பயங்கரவாத தொகுதி வழக்கில் கைது செய்யப்பட்ட ஆறாவது குற்றவாளி இவர் ஆவார். மும்பையைச் சேர்ந்த தபிஷ் நாசர் சித்திக், புனேவைச் சேர்ந்த அபு நுசைபா மற்றும் சுபைர் நூர் முகமது ஷேக், தானேயைச் சேர்ந்த ஷர்ஜீல் ஷேக் மற்றும் சுல்பிகர் அலி பரோடாவாலா ஆகிய 5 பேர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர். ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத குழுவின் சித்தாந்தங்களை இந்திய மண்ணில் பரப்பும் ஒரு பெரும் நெட்ஒர்க்கை பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பு கண்டுபிடித்ததை அடுத்து இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.