மீண்டும் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த ஒரு மாணவர் தற்கொலை
ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த 18 வயது மாணவர் நேற்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது சிகார் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களில் நடைபெறும் இரண்டாவது தற்கொலையாகும். பரத்பூர் மாவட்டத்தில் உள்ள நாட்பாய் நகரைச் சேர்ந்த நிதின் ஃபவுஜ்தார், சிகார் மாவட்டத்திற்கு நீட் தேர்வுக்கு பயிற்சி பெற கடந்த ஜூன் மாதம் வந்தார். அவர் நேற்று(சனிக்கிழமை) வகுப்புகளுக்கு செல்லாமல் விடுதியில் இருந்துள்ளார். ஃபவுஜ்தாரின் அறையில் தங்கி இருந்த மற்றொரு மாணவன் ஃபவுஜ்தார் தங்கி இருந்த அறையின் கதவை திறக்க முயற்சித்த போது அது உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. ஜன்னல் வழியாக அந்த மாணவர் பார்த்தபோது, ஃபவுஜ்தார் தூக்கில் சடலமாக தூங்கிக் கொண்டிருந்தார் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் தொடரும் தற்கொலைகள்
சிகார் மாவட்டத்தில் இந்த மாதம் 5 ஆம் தேதி நீட் தேர்வுக்கு தயாராகி வந்த கௌசல் மீனா என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இந்தியாவில் நீட் பயிற்சி வகுப்புகளுக்கு தலைமையகம் என சொல்லப்படும் ராஜஸ்தானின் கோட்டா மாவட்டத்தில் இந்த ஆண்டு மட்டும் 23 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த வருடம் 15 பேர் தற்கொலை செய்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ராஜஸ்தான் மாநிலத்திற்கு ஒவ்வொரு வருடமும் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளுக்காக பயிற்சி பெற வருகின்றனர்.