மணிப்பூரில் வெளிச்சத்திற்கு வந்த மற்றொரு கூட்டு பாலியல் பலாத்கார சம்பவம்
மணிப்பூர் வன்முறையின் போது ஒரு கும்பல் இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் குறித்த காணொளிப் பதிவு ஒன்று வெளியாகி, இந்தியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நாட்டையே உலுக்கிய அந்த சம்பவம் வெளியான பிறகு, மணிப்பூர் வன்முறையின் போது பாதிக்கப்பட்ட பல்வேறு பெண்கள் தற்போது தங்களுக்கு நேர்ந்த அசம்பாவிதங்களை வெளிவந்து பேசத் தொடங்கியிருக்கிறார்கள். தற்போது, சுராசந்த்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர், தனக்கு நேர்ந்த கொடுமையைப் பற்றி, பிஷ்னுபூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். சுராசந்த்பூரில் இருந்து 35 கிமீ தொலைவில், பிஷ்னுபூரில் உள்ள மறுவாழ்வு முகாம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருக்கும் அவர் அளித்த புகாரின் மீது 'ஜீரோ FIR' பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
மற்றொரு சூட்டு பாலியல் வன்கொடுமை நிகழ்வு:
போராட்டம் வெடித்த மே-3ம் தேதியன்று, போராட்டக்காரர்கள் தங்களுடைய வீட்டிற்கு, தங்களைச் சுற்றியிருக்கும் வீடுகளுக்கும் தீவைக்க தொடங்கியதையடுத்து, வீட்டை விட்டு வெளியேற, தங்கள் குடும்பத்தினருடன் தப்பித்து ஓடியிருக்கிறார் அவர். அப்போது கீழே விழுந்த அவரைச் சூழ்ந்த போராட்டக்காரர்கள், அவரைப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள். மிகவும் பாதிக்கப்பட்ட உடல்நிலையில், மனநலமும் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் கூடத் தோன்றியதாகத் தெரிவித்திருக்கிறார் அவர். முதலில் மருத்துவமனைக்கே செல்லத் தயங்கிய அவர், உடல்நிலை மிகவும் மோசமாகவே, இம்பாலில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு சென்றிருக்கிறார். அங்கே அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், அவருக்கு நேர்ந்த சம்பவம் குறித்து காவல்துறையிடம் புகாரளிக்கவும் உதவியதாகத் தெரிவித்துள்ளார். தற்போது 376D, 354, 120B மற்றும் 34 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.