ஜெயலலிதாவை 'இந்துத்துவா தலைவர்' என்று அழைத்த அண்ணாமலை: அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்
தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை சமீபத்தில் அதிமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான ஜெ.ஜெயலலிதாவைப் பற்றிப் பேசியதுடன், "தமிழகத்தில் உள்ள அனைவரையும் விட அவர் மிக உயர்ந்த இந்துத்துவா தலைவர்" என்று கூறினார். அண்ணாமலை, பி.டி.ஐ-க்கு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இது குறித்து பேசியிருக்கிறார். "தமிழகத்தில் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் கீழ் பாஜக இருக்கும் நிலையை நான் ஏற்பட விடமாட்டேன்" என்று அந்த பேட்டியில் அவர் கூறியுள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இந்துத்துவா சித்தாந்தத்தில் இருந்து அதிமுக கட்சி விலகி சென்றதால் அந்த கட்சி ஏற்படுத்திய வெற்றிடத்தை பாஜக நிரப்ப அதிக வாய்ப்பு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
'அண்ணாமலையின் அறியாமையையும் தவறான புரிதலையும் காட்டுகிறது': சசிகலா
"ஜெயலலிதா ஜீ உயிருடன் இருக்கும் வரை, தமிழகத்தில் இருக்கும் மற்றவர்களை விட உயர்ந்த இந்துத்துவா தலைவராக அவர் இருந்தார். 2014-க்கு முன், தனது இந்து அடையாளத்தை வெளிப்படையாகக் காட்டிய ஜெயலலிதா மற்றும் அவரது கட்சியை தான் ஒரு இந்து வாக்காளர் கண்டிப்பாக தேர்ந்தெடுத்திருப்பார்" என்று அண்ணாமலை கூறியுள்ளார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கும், 2002-03ல் தமிழகத்தில் மதமாற்றத் தடைச் சட்டத்தை இயற்றியதற்கும் பாஜக தலைவர்களைத் தவிர, ஜெயலலிதாதான் மிக பெரிய காரணமாக இருந்தார் என்றும் அவர் கூறினார். அண்ணாமலையின் இந்த கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ள வி.கே.சசிகலா, அண்ணாமலையின் இந்த கருத்து ஜெயலலிதாவை பற்றிய அவரது அறியாமையையும் தவறான புரிதலையும் காட்டுவதாக உள்ளது என்று கூறியுள்ளார்.
அண்ணாமலையின் கருத்துக்கு அதிமுக எதிர்ப்பு
ஜெயலலிதா போன்ற மக்கள் தலைவரை யாராலும் இவ்வளவு குறுகிய வட்டத்திற்குள் அடைத்துவிட முடியாது என்றும் சசிகலா கூறியுள்ளார். "இந்துக்கள்,கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் என அனைத்து சமூகத்தினராலும் போற்றப்படும் தலைவி அம்மா ஆவார். ஜாதி-மதத் தடைகளைத் தாண்டிய மாபெரும் தலைவி அம்மா, மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர ஆவார்.'' என்று சசிகலா தெரிவித்துள்ளார். இதனிடையே ஜெயலலிதாவை 'இந்துத்துவா தலைவர்' என்று அண்ணாமலை குறிப்பிட்டதற்கு அதிமுகவும் எதிர்ப்பு தெரிவித்தது. ஜெயலலிதாவை புகழ்வது போல, இந்து தத்துவத்தை மட்டும் அவர் ஆதரித்தாக கூறி அவரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்திய அண்ணாமலையை வன்மையாக கண்டிக்கிறோம் என்று அதிமுக தலைவர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.