அண்ணா பல்கலைக் கழக யுஜி தேர்வு முடிவுகள் வெளியானது; முடிவுகளை தெரிந்துகொள்வது எப்படி?
சென்னை அண்ணா பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளில் நடத்தப்படும் இளங்கலை பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளுக்கான செமஸ்டர் முடிவை வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 27) அன்று வெளியிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளில் இளங்கலை செமஸ்டர் தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரும் தங்கள் முடிவுகளை அண்ணா பல்கலைக்கழக வலைதளத்தில் சரிபார்த்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மாணவர்கள் தங்களின் மதிப்பெண் பட்டியலை coe1.annauniv.edu என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். அண்ணா பல்கலைக் கழகம் முன்னதாக, இந்த வார தொடக்கத்தில், தொலைதூரக் கல்வி எம்பிஏ மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளையும் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தேர்வு முடிவுகளை சரிபார்ப்பது எப்படி?
தேர்வு முடிவுகளை சரிபார்த்து பதிவிறக்கம் செய்ய விண்ணப்பதாரர்கள் தங்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை, அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான coe1.annauniv.eduஇல் உள்ளிடவும். இதை சரியாக உள்ளிட்ட பிறகு, சம்பந்தப்பட்ட மாணவரின் முடிவு பிடிஎப் வடிவில் திரையில் காட்டப்படும். முடிவுகளை சரிபார்த்து அதை பதிவிறக்கவும். எதிர்கால தேவைகளுக்கு அதை பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். மாணவர்கள் தங்கள் விடைத்தாளின் நகலைப் பெறுவதற்கு அக்டோபர் 3ஆம் தேதி மாலை ஐந்து மணிக்குள் ரூ.300 செலுத்தி தங்கள் கல்லூரி மூலம் விண்ணப்பிக்குமாறு அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது. விடைத்தாள் நகலைப் பெற்ற பிறகு, அதில் ஏதேனும் தவறுகள் இருந்தால் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.