ஆந்திர பெண்ணுக்கு பார்சலில் மனித சடலத்தை அனுப்பி ரூ.1.3 கோடி கேட்டு மிரட்டல்!
ஆந்திரா மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம், ஏன்டாகண்டி கிராமத்தைச் சேர்ந்த சாகி துளசி என்ற பெண், தனது வீட்டிற்கு மின்சாதன பொருட்கள் வரும் என எதிர்பார்த்திருந்த நேரத்தில், பார்சலில் மனித எச்சங்கள் வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூடுதலாக, சடலத்துடன் ரூ.1.3 கோடி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர் மர்ம நபர்கள். சாகி துளசி, க்ஷத்ரிய சேவா சமிதியின் மூலமாக கட்டுமானத்தில் உள்ள தனது வீட்டிற்குப் பொருட்களுக்காகக் காத்திருந்தார். அந்த அமைப்பிடம் நிதி உதவி கோரியபோது, அவருக்கு முதலில் ஓடுகள் வழங்கப்பட்டன. அதேபோல இம்முறையும் துளசி, மின்விளக்கு, மின்விசிறி போன்ற மின்சாதனப் பொருட்களை கோரியிருந்தார். இருப்பினும், அவரது வீட்டு வாசலில் வழங்கப்பட்ட பார்சலில் மனித உடற்பகுதி மற்றும் ரூ.1.3 கோடி கேட்டு மிரட்டி கடிதம் இருந்தது.
பணம் தரவில்லை என்றால் பின்விளைவுகள் ஏற்படும் என மிரட்டல்
சாகி துளசி, பார்சலை திறந்தபோது, அதில் 45 வயது மதிக்கத்தக்க ஒருவரின் சடலம் கிடந்ததை கண்டார். அதனுடன் வந்த மிரட்டல் கடித்ததில் ரூ.1.3 கோடி பணம் தர வேண்டும் என்றும், இல்லை யென்றால் மோசமான பின்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, சாகி துளசி மற்றும் அவரது குடும்பம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை தொடங்கியுள்ளனர். முதற்கட்ட விசாரணையில், இறந்த நபர் 4-5 நாட்களுக்கு முன் இறந்துவிடுவதாக தெரியவந்துள்ளது. தற்போது, போலீசார் அந்த மர்ம நபரை மற்றும் சத்ரியா சேவா சமிதி நிர்வாகத்தை விசாரித்து வருகின்றனர்.