ஆந்திரா சட்டசபை - விசில் அடித்து அமளியில் ஈடுபட்ட நடிகர் பாலகிருஷ்ணா
ஆந்திரா மாநிலத்தில் தற்போது ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக ஆட்சி செய்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் அம்மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு திறம் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே நேற்று(செப்.,21)அம்மாநில சட்டசபை கூட்டத்தொடர் துவங்கிய நிலையில், சந்திரபாபு நாயுடுவை விடுதலை செய்யுமாறு அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் தம்மிநேனி சீதாராம் இருக்கையினை சூழ்ந்து கூச்சலிட்டுள்ளனர். இந்த விவகாரம் குறித்து கூட்டத்தொடரில் விவாதம் செய்யப்படும் என்று சபாநாயகர் கூறியும், அவர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டுள்ளனர்.
எம்.எல்.ஏ.க்கள் 15 பேர் சஸ்பெண்ட்
அமளியில் அக்கட்சியின் எம்.எல்.ஏ.வும், நடிகருமான நந்தமூரி பாலகிருஷ்ணா தனது தொடையில் தட்டி, மீசையை முறுக்கி மிரட்டல் விடுத்துள்ளார். அதனை தொடர்ந்து இன்றும்(செப்.,22) அவர் விசில் அடித்து அமளியில் ஈடுபட்டதால், சபாநாயகர் அவருக்கு எச்சரிக்கை விடுத்தார் என்றும் கூறப்படுகிறது. மேலும், அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் 15 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அதனுள் 12 பேர் ஒரு நாளைக்கு மட்டும் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், மீதமுள்ள அக்கட்சி எம்.எல்.ஏ.க்களான கே.அச்சன்நாயுடு, பி.அசோக் மற்றும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. என 3 பேர் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.