அமிர்தசரஸ் பொற்கோவில் அருகே மீண்டும் குண்டுவெடிப்பு
பஞ்சாபின் அமிர்தசரஸ் பொற்கோயிலுக்கு அருகிலுள்ள ஹெரிடேஜ் தெருவில் இன்று(மே 8) காலை இரண்டாவது குண்டுவெடிப்பு நடந்ததாகக் கூறப்படுகிறது. தகவல்களின்படி, இந்த குண்டுவெடிப்பு காலை 6:30 மணியளவில் நடந்தது. கடந்த சனிக்கிழமை, இதே போன்ற இன்னொரு சம்பவம் பொற்கோயிலுக்கு அருகே நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. "நாங்கள் இது குறித்து விசாரித்து வருகிறோம். இங்கு நிலைமை சாதாரணமாக உள்ளது. நாசவேலை எதிர்ப்பு படை, வெடிகுண்டு படை மற்றும் FSL குழுக்கள் இங்கு உள்ளன. ஒருவருக்கு காலில் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது" என்று கூடுதல் துணை போலீஸ் கமிஷனர்(ADCP) மெஹ்தாப் சிங் தெரிவித்துள்ளார். வெடிகுண்டு படை மற்றும் தடய அறிவியல் ஆய்வக(FSL) குழு குண்டுவெடிப்பு நடந்த இடத்திற்கு சென்றுள்ளது.
இது பயங்கரவாத தாக்குதல் இல்லை: ஆம் ஆத்மி
முதல் குண்டுவெடிப்பு பன்சால் இனிப்பு கடை அருகே நடந்தது. இரண்டாவது குண்டுவெடிப்பு அதே இடத்திற்கு அருகில், ஆனால் எதிர் பக்கத்தில் நடந்துள்ளது. அந்த பகுதியை சுற்றி வளைத்த போலீசார், வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து வருகின்றனர். முதல் குண்டுவெடிப்பு சனிக்கிழமை இரவு நடந்தது. இதனால், ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது என்றும் சில கட்டிடங்களின் கண்ணாடிகள் உடைந்தன என்றும் போலீஸார் தெரிவித்தனர். பஞ்சாபை ஆளும் ஆம் ஆத்மி கட்சி இது பயங்கரவாத தாக்குதல் அல்ல என்று கூறி வருகிறது. இதற்கான காரணம் என்ன என்பது இன்னும் தெரிவிக்கப்படவில்லை. முதல் குண்டுவெடிப்பு குறித்து போலீசார் தடயவியல் விசாரணையை மேற்கொண்டனர், ஆனால் இது குறித்த அறிக்கையை இன்னும் வெளியிடவில்லை.
இந்த காலவரிசையைப் பகிரவும்