அசாம் சிறையில் அடைக்கப்பட்டார் காலிஸ்தான் தலைவர் அம்ரித்பால் சிங்
தப்பியோடிய காலிஸ்தான் ஆதரவாளரும் 'வாரிஸ் பஞ்சாப் டி' தலைவருமான அம்ரித்பால் சிங்கைத் தேடும் வேட்டை ஞாயிற்றுக்கிழமை காலை ஒரு முடிவுக்கு வந்ததது. பஞ்சாபின் மோகா மாவட்டத்தில் உள்ள பிந்தரன்வாலேவின் சொந்த கிராமமான ரோடில் வைத்து அம்ரித்பால் சிங்கை போலீசார் கைது செய்தனர். தீவிரவாதி ஜர்னைல் சிங் பிந்தரன்வாலே என்பவர் 1984இல் இந்திய அரசால் கொல்லப்பட்ட முதல் காலிஸ்தான் ஆதரவாளர் ஆவார். அவரது கிராமத்துக்கு வெளியே தற்போது அம்ரித்பால் கைது செய்யப்பட்டிருக்கிறார். முதலில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்(NSA) கீழ் கைது செய்யப்பட்ட அவர், பதிண்டா விமான நிலையத்திலிருந்து அசாமில் உள்ள திப்ருகர் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதே மத்திய சிறையில் தான் அவரது ஒன்பது கூட்டாளிகளும் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
"அம்ரித்பால் கைது செய்யப்படவில்லை, அவர் சரணடைந்தார்"
"பஞ்சாப் காவல்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவரை ரோட் கிராமத்தில் கண்டுபிடித்தோம். அந்த கிராமத்தை போலீசார் சுற்றி வளைத்தனர். அதன் பிறகு தப்பிக்க முடியாது என்பது அவருக்கே தெரிந்துவிட்டது. காலை 6.45 மணியளவில் அவர் கைது செய்யப்பட்டார்." என்று பஞ்சாப் காவல்துறை ஐஜி (தலைமையகம்) சுக்செயின் சிங் கில் கூறினார். அம்ரித்பால், குருத்வாரா சாஹிப் என்ற சீக்கிய கோவிலுக்குள் இருந்தது போலீஸாருக்கு தெரிந்திருந்தும், அவர்கள் அந்த கோவிலின் புனிதத்தை காப்பதற்காக அதற்குள் நுழையவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் பிந்திரன்வாலேவின் மருமகனும் முன்னாள் அகல் தக்த் தலைவருமான ஜஸ்பிர் சிங் ரோட், அம்ரித்பால் கைது செய்யப்படவில்லை, அவர் சரணடைந்தார் என்று கூறியுள்ளார்.