தவெக-வுக்கு ஆதரவு அளித்த மன்னார்குடி MLA காமராஜ் அ.ம.மு.க-வில் இருந்து அதிரடி நீக்கம்
செய்தி முன்னோட்டம்
தமிழக அரசியலில் நிலவி வந்த மிகப்பெரிய மர்மத்திற்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில், மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் முனைவர் எஸ். காமராஜ் அவர்களை, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து (அ.ம.மு.க) அதிரடியாக நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உத்தரவிட்டுள்ளார். "தமிழகம் விஜய்யை நம்புகிறது" எனப் புகழ்ந்து தள்ளியதோடு, தவெக அரசுக்குத் தனது ஆதரவையும் அறிவித்தார். கட்சியின் நிலைப்பாட்டிற்கு மாறாகத் தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு தெரிவித்ததே இந்த அதிரடி நடவடிக்கைக்குக் காரணமாகும்.
டிடிவி தினகரன் ஆவேசம்
துரோகம் இழைத்துவிட்டார்
அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள தலைமைக் கழக அறிவிப்பில், காமராஜ் மீதான தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்: கழகத்தின் நிலைப்பாட்டினை மீறி இன்று சட்டமன்றத்தில் தன்னிச்சையாகத் தமிழக வெற்றிக் கழகத்திற்குத் தனது ஆதரவைத் தெரிவித்திருப்பது கட்சியின் குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முற்றிலும் முரணானது. காமராஜின் வெற்றிக்காகப் பாடுபட்ட அ.ம.மு.க மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களுக்கும், அவர் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மன்னார்குடி தொகுதி மக்களுக்கும் இழைத்திருக்கும் மிகப்பெரிய துரோகம் இது. கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படுத்திய காரணத்தினால், காமராஜ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுவதாக தினகரன் அறிவித்துள்ளார்.
நெருக்கடியில் அ.ம.மு.க
சட்டமன்றத்தில் நிகழ்ந்த 'திருப்பம்'
முன்னதாக இன்று சட்டமன்றத்தில் பேசிய காமராஜ், "தமிழக இளைஞர்களும் நாங்களும் முதலமைச்சர் விஜய்யை நம்புகிறோம்" எனப் பாராட்டியதோடு, தவெக அரசு தொடரத் தனது ஆதரவையும் உறுதிப்படுத்தினார். நேற்று வரை காமராஜின் ஆதரவு குறித்து நிலவி வந்த சந்தேகங்களுக்கு இந்த உரையின் மூலம் அவர் முற்றுப்புள்ளி வைத்தார். மன்னார்குடி தொகுதியில் செல்வாக்கு மிக்க ஒரு மூத்த நிர்வாகியும், கட்சியின் ஒரே எம்.எல்.ஏ-வுமான காமராஜ் நீக்கப்பட்டுள்ளதால், அ.ம.மு.க சட்டமன்றத்தில் தனது பிரதிநிதித்துவத்தை இழந்துள்ளது. அதே வேளையில், நாளை நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு முன்னதாகக் காமராஜின் ஆதரவு முதலமைச்சர் விஜய்க்கு மிகப்பெரிய தார்மீக பலத்தை அளித்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
முதல்வர் விஜயை புகழ்ந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக MLA காமராஜ்#VIjay #AMMK #TVK #Kamaraj #assembly pic.twitter.com/QxiqQ9zg5B
— Galatta Media (@galattadotcom) May 12, 2026