மணிப்பூர் வன்முறை: இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வடகிழக்கு மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், மணிப்பூர் இனக்கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என மத்திய அரசு இன்று(மே 30) அறிவித்துள்ளது. வன்முறையால் பாதிக்கப்பட்ட சுராசந்த்பூர் மாவட்டத்தை பார்வையிட சென்ற அமித்ஷாவுக்கு தேசியக் கொடிகளை ஏந்திய பழங்குடியின பெண்கள் வரவேற்பளித்தனர். மணிப்பூரில் நிலவும் அமைதியின்மைக்கு மத்தியில் "மத்திய அரசால் மட்டுமே இதற்கு தீர்வு காண முடியும்" என்ற சுவரொட்டிகள் அங்கு ஒட்டப்பட்டிருந்தன. அம்மாநில முதலமைச்சர் என்.பிரேன் சிங் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் உட்பட பல முக்கிய பிரமுகர்களை உள்துறை அமைச்சர் இன்று இம்பாலில் சந்தித்தார்.
வதந்திகளை அகற்ற தொலைபேசி சேவைகள் அமைக்கப்படும்: மத்திய அரசு
"மணிப்பூரின் முக்கிய பிரமுகர்கள் அமைதிக்கான தங்கள் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினர். மணிப்பூரில் இயல்புநிலையை மீட்டெடுக்க நாங்கள் ஒன்றாக பங்களிப்போம் என உறுதியளித்தனர்" என்று உள்துறை அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அமைதியை மீட்டெடுக்க, இம்பாலில் உள்ள தலைமைச் செயலகத்தில் விரிவான பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. "வதந்திகளை அகற்ற" BSNL உதவியுடன் தொலைபேசி சேவைகள் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. சில சிறிய சம்பவங்களைத் தவிர, 11 மலை மாவட்டங்களிலும் நேற்று பெரிய வன்முறைச் சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை. நேற்று முந்தைய தினம் நடந்த வன்முறையில் ஒரு போலீஸ்காரர் உட்பட குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 12 பேர் காயமடைந்தனர்.
இந்த காலவரிசையைப் பகிரவும்