விமானத்தில் சிறுநீர் கழித்த விவகாரம்: புதிய மது கட்டுப்பாடுகளை அறிவித்தது ஏர் இந்தியா
ஏர் இந்தியா தனது விமானத்தில் உள்ள மது சேவைக் கொள்கைகளை மாற்றுவதற்கு முடிவு செய்துள்ளது. தேவைப்பட்டால் பயணிகளுக்கு மது வழங்குதவதை மறுக்கலாம் என்று விமான பணியாளர்களுக்கு இந்த அறிவிப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சக பயணி மீது போதையில் இருந்த பயணி ஒருவர் சிறுநீர் கழித்த சம்பவங்களுக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விமான போக்குவரத்து இயக்குனரகம்(DGCA) கடந்த சில நாட்களில் இரண்டு முறை ஏர் இந்தியா நிறுவனத்திற்கு அபராதம் விதித்துள்ளது. கடந்த நவம்பர் 26, மும்பை தொழிலதிபர் சங்கர் மிஸ்ரா, ஏர் இந்தியாவின் விமானத்தில் பயணித்த போது குடிபோதையில் சக பயணி மீது சிறுநீர் கழித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஏர் இந்தியாவின் திருத்தப்பட்ட கொள்கை
திருத்தப்பட்ட கொள்கையின்படி, விமான பணியாளர்களால் மதுபானம் வழங்கப்பட்டால் மட்டுமே பயணிகள் மது அருந்த அனுமதிக்கப்பட வேண்டும். மேலும், விமானத்தில் தங்களுடைய சொந்த மதுபானம் அருந்தக்கூடிய பயணிகளை அடையாளம் காண்பதில் விமான பணியாளர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. "மது பானங்கள் வழங்கப்படுவது நியாயமான மற்றும் பாதுகாப்பான முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும். பயணிகளுக்கு மதுபானம் வழங்குவதை சாதுரியமாக மறுப்பதும் இதில் அடங்கும்" என்று இந்த கொள்கையில் கூறப்பட்டுள்ளது. விமான சேவை மறுப்பில் "செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை" பட்டியலையும் ஏர் இந்தியா வெளியிட்டுள்ளது. "அவர்களின் நடத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று மரியாதையோடு நாகரீகமாக" பயணிகளை எச்சரிக்குமாறு கொள்கையில் அறிவுறுத்தபட்டுள்ளது.