வின்ஸ்டன் சர்ச்சில் பற்றிய உண்மையைச் வெளியிட பிபிசிக்கு தைரியம் இருக்கிறதா: சேகர் கபூர்
2002 குஜராத் கலவரத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையை கேள்விக்குள்ளாக்கிய பிபிசி ஆவணப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. "பொய்களை" ஆவணப்படுத்தியதற்காக பிபிசி நிறுவனத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் மக்கள் ஒரு பக்கம் இருக்க, இந்த ஆவணப்படத்திற்கு ஆதரவு தெரிவித்தும் சிலர் பேசி வருகின்றனர். இந்த ஆவணப்படம் பெரும் சர்ச்சையை கிளப்பி இருப்பதால் இது ஒளிபரப்பாவதை மத்திய அரசு தடை செய்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது. அது மட்டுமில்லாமல் இந்த ஆவணப்படத்தின் இணைப்புகளை அல்லது காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பகிர்வதும் தடை செய்யப்பட்டிருக்கிறது. பிபிசி ஆவணப்படத்திற்கான எதிர்ப்பு அதிகரித்திருக்கும் இந்த வேளையில், திரைப்பட இயக்குநர் சேகர் கபூர், முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலைப் பற்றி கேள்விகளை எழுப்பியுள்ளார்.
"நேசத்துக்குரிய தலைவர்" பற்றிய உண்மை
இரண்டாம் உலகப் போரின் மிகவும் சவாலான காலக்கட்டத்தில் சர்ச்சில் தனது நாட்டிற்குச் சேவை செய்ததைத் தவிர, பிரிட்டிஷ் தலைவராக சர்ச்சிலின் வாழ்க்கையை ஆவணப்படுத்த இங்கிலாந்து ஒளிபரப்பாளரான பிபிசிக்கு தைரியம் உள்ளதா என்று இந்த மூத்த திரைப்படத் இயக்குநர் வினா எழுப்பி இருக்கிறார். "வங்காளப் பஞ்சம், மில்லியன் கணக்கானவர்களின் இறப்பு மற்றும் ரசாயன குண்டுவெடிப்புக்கு சர்ச்சில் தான் காரணம்" என்று குற்றம்சாட்டி இருக்கும் இந்த இயக்குநர், அவர்களின் "நேசத்துக்குரிய தலைவர்" வின்ஸ்டன் சர்ச்சிலைப் பற்றிய உண்மையை வெளிப்படுத்த பிபிசிக்கு தைரியம் உள்ளதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.