ஆலந்தூர் ரயில்வே ஸ்டேஷன் கொலை வழக்கு - கைதானவர் மீதான குண்டர் சட்டம் ரத்து
செய்தி முன்னோட்டம்
சென்னை பரங்கிமலை பகுதியில் வசித்துவந்த கல்லூரி மாணவி சத்யப்ரியா, அதேப்பகுதியிலுள்ள சதீஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார்.
இதற்கு பெண்வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தநிலையில், சத்யப்ரியா சதீஷிடம் பேசுவதை நிறுத்தியதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சதீஷ், கடந்தாண்டு அக்டோபர் 13ம்தேதி கல்லூரிச்செல்ல பரங்கிமலை ரயில்நிலையம் வந்த சத்யப்ரியாவை ரயில்முன் தள்ளிவிட்டு கொலை செய்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறை, சதீஷை மறுநாளே கைது செய்தனர்.
பின்னர், இவ்வழக்கின் விசாரணை சிபிசிஐடி'க்கு மாற்றப்பட்டது.
இவர்களின் பரிந்துரைப்படி சதீஷ் மீது குண்டர் சட்டம் கீழ் வழக்குப்பதிவு செய்ய கடந்த நவம்பர் 4ம்தேதி சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டார்.
அதனைத்தொடர்ந்து, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, குண்டர் சட்டத்தினை ரத்துச்செய்ய கோரி சதீஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார் என்று கூறப்படுகிறது.
குண்டர் சட்டம்
சென்னை காவல் ஆணையரின் இயந்திரத்தனமான உத்தரவினை ரத்து செய்யவேண்டும் என கோரல்
அந்த மனுவில், அடிப்படை உரிமையினைமீறி, அவசரநிலையில் தன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், குண்டர் சட்டத்தின்கீழ் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் நகல் முறையாக இல்லை. அதனால், அதை ரத்துச்செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தப்பொழுது, ஒரு கொடூரமான செயலை செய்துள்ள சதீஷுக்கு எவ்வித நிவாரணமும் வழங்கக்கூடாது என்று காவல்துறை சார்பில் கூறப்பட்டதாக தெரிகிறது.
இதனைத்தொடர்ந்து இவ்வழக்கின் அடுத்த விசாரணையில், குண்டர் சட்டத்தின் கீழான கைது உத்தரவில் செப்டம்பர் 27 என தமிழிலும், அக்டோபர் 13 என ஆங்கிலத்திலும் முரணாகவுள்ளது என்று சதீஷ் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுந்த விளக்கத்தினை காவல்துறை அளிக்காத காரணத்தினால், சதீஷ் மீதான குண்டர்சட்டத்தினை ரத்து செய்வதாகக்கூறி நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.