
மடப்புரம் அஜித்குமார் பிரேத பரிசோதனை அறிக்கை: 50 காயங்கள், மூளையில் ரத்தக்கசிவு, சிகரெட் சூடு
செய்தி முன்னோட்டம்
திருபுவனம் அருகே மடப்புரத்தில் காவலாளி அஜித் குமார் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியான தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. நகை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட அஜித் குமாரை, போலீசார் சித்திரவதை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவரது உடலில் 50 வெளிப்புற காயங்கள் இருந்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அஜித்தின் உடலில் 12 சிராய்ப்பு காயங்கள் இருந்ததுடன், மீதமுள்ளவை ரத்தக்கட்டு காயங்கள் ஆகும். குறிப்பாக, ஒரே இடத்தில் பல முறை தாக்கப்பட்டதைக் காட்டும் வகையில், ஒரு காயத்துக்குள்ளேயே பல்வேறு வகை ரத்தக்கட்டு அடையாளங்கள் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவரங்கள்
மூலையில் ரத்தகசிவு ஏற்பட்டிருந்ததாகவும் அறிக்கை
அதிலும் மிகச் முக்கியமாக, வயிற்றில் கம்பி குத்திய காயம், மண்டையோட்டில் அடிக்கபட்டதால் ஏற்பட்ட காயம் மற்றும் மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு ஆகியவை மரணம் கொடூரமாக நிகழ்ந்ததைக் காட்டுகிறது. மேலும், சிகரெட் கொண்டு சூடு வைக்கப்பட்ட புண் இருப்பதாகவும் என்பதும் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தரையில் இழுத்துச் செல்லப்பட்டதையோ அல்லது தற்காப்புக்காக போராடியபோது ஏற்பட்டதையோ போன்ற சிராய்ப்புகள் கூட உடலில் இருந்ததாக அறிக்கை கூறுகிறது. மேலும், இந்தச் சித்ரவதை பல மணி நேரம், பலர் சேர்ந்து மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்த அதிர்ச்சி தகவல்கள், காவல்துறையினரால் நேரிடையான அதிகாரம் மீறிய விசாரணை, மனித உரிமை மீறல் உள்ளிட்ட கேள்விகளை எழுப்பும் வகையில் உள்ளன.