விமானிகளின் அறைக்குள் பெண் நண்பரை அழைத்து சென்ற இரு விமானிகள் மீது நடவடிக்கை
விமானிகளின் அறைக்குள் பெண் நண்பரை அழைத்து சென்ற இரு விமானிகள் மீது ஏர் இந்தியா நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. விமானிகள் அமர்ந்து விமானத்தை இயக்கும் அறை 'காக்பிட்' என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக இந்த அறைக்குள் விமானிகளை தவிர வேறு யாரும் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. பாதுகாப்பு காரணங்களுக்காக குறிப்பிட்ட விமான பணியாளர்கள் மட்டுமே இதற்குள் செல்ல அனுமதிக்கப்டுகின்றனர். இந்நிலையில், சென்ற வாரம் இரு ஏர் இந்தியா விமானிகள் தங்களது பெண் நண்பரை காக்பிட் அறைக்குள் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. டெல்லியில் இருந்து லே-க்கு சென்ற ஏர் இந்தியா விமானத்தில்(AI-445) இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
இதே போன்ற இன்னொரு சம்பவம் கடந்த பிப்ரவரி மாதம் நிகழ்ந்தது
சம்பவத்தின் போது விமானத்தில் இருந்த விமான பணியாளர்கள் இது குறித்து புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை பெற்ற ஏர் இந்தியா நிர்வாகம், குற்றம்சாட்டப்பட்ட விமானி மற்றும் துணை விமானிக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து பேசிய சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம்(டிஜிசிஏ), "இந்த விவகாரம் குறித்து எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிகளின்படி, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இது குறித்து விசாரணை நடத்த ஏர் இந்தியா ஒரு குழுவை அமைத்துள்ளது" என்று தெரிவித்திருக்கிறது. இதே போன்ற இன்னொரு சம்பவம் கடந்த பிப்ரவரி மாதம் நிகழ்ந்தது. பிப்ரவரி-27அன்று AI-915 விமானத்தின் காக்பிட்டிற்குள் தனது பெண் தோழியை ஒரு ஏர் இந்தியா விமானி அழைத்து சென்றார். இதனால் அவரது உரிமம் ரத்துசெய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.