ஜெர்மனியில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்திற்கு கடத்தல் எச்சரிக்கை: ஜெய்பூரில் அவசரமாகத் தரையிறக்கம்
செய்தி முன்னோட்டம்
ஜெர்மனியின் ஃபிராங்பர்ட் நகரில் இருந்து டெல்லி நோக்கி வந்த ஏர் இந்தியா விமானத்திற்கு விமானக் கடத்தல் எச்சரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவ்விமானம் புதன்கிழமை காலை ஜெய்பூர் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த 306 பயணிகளும் பாதுகாப்பாக உள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஏர் இந்தியா AI2030 விமானம் இந்திய வான்வெளியில் அகமதாபாத் ATC கட்டுப்பாட்டில் இயங்கிக் கொண்டிருந்தபோது, விமானியிடமிருந்து ஸ்க்வாக் 7500 அனுப்பப்பட்டது. சர்வதேச விமானப் போக்குவரத்து விதிகளின்படி 'ஸ்க்வாக் 7500' என்ற குறியீடு, விமானம் சட்டவிரோதமாக கடத்தப்படும் சூழலிலோ அல்லது அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்போதோ மட்டுமே பயன்படுத்தப்படும். இந்த சமிக்ஞையைத் தொடர்ந்து விமானம் உடனடியாக திருப்பி விடப்பட்டு, காலை 9.35 மணியளவில் ஜெய்பூர் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
பாதுகாப்புப் படைகள்
முடுக்கிவிடப்பட்ட பாதுகாப்புப் படைகள்
எச்சரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜெய்பூர் விமான நிலையத்தில் பாதுகாப்பு முகமைகள் உஷார் படுத்தப்பட்டு விமானம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.
பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS), மத்திய தொழில் பாதுகாப்புப் படை (CISF) மற்றும் குண்டுவெடிப்பு தடுப்புக் குழுவினர் விமானத்தையும் பயணிகளின் உடமைகளையும் தீவிர சோதனைக்கு உட்படுத்தினர்.
டெல்லியில் உள்ள தேசியப் பாதுகாப்புப் படை (NSG) சிறப்புப் பிரிவினரும் தேவைப்பட்டால் களமிறங்க ஆயத்த நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டனர்.
விமானி தவறுதலாக இந்த எச்சரிக்கை சமிக்ஞையைத் தூண்டியிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கும் போதிலும், இந்த அவசரநிலைக்கான சரியான காரணம் குறித்து வான்வழித் கட்டுப்பாட்டு மையம் மற்றும் ஏர் இந்தியா அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.