Page Loader
ஏர் இந்தியா விமான விபத்தின் மர்மம் விலகுகிறது; இன்று விசாரணை அறிக்கை வெளியாகக்கூடும்
முதற்கட்ட அறிக்கை இன்று அல்லது சனிக்கிழமை வெளியிடப்படலாம் என்று வட்டாரங்கள் தெரிவித்தன

ஏர் இந்தியா விமான விபத்தின் மர்மம் விலகுகிறது; இன்று விசாரணை அறிக்கை வெளியாகக்கூடும்

எழுதியவர் Venkatalakshmi V
Jul 11, 2025
04:02 pm

செய்தி முன்னோட்டம்

அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் AI 171 விபத்துக்குள்ளாகி ஒரு மாதம் ஆன நிலையில், இந்தியாவின் மிக மோசமான விமானப் பேரழிவுகளில் ஒன்றாக கருதப்படும் இந்த விபத்து குறித்த முதற்கட்ட அறிக்கை இன்று அல்லது சனிக்கிழமை வெளியிடப்படலாம் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. இரட்டை எஞ்சின் செயலிழப்பு, தொழில்நுட்ப கோளாறு, எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகளின் இயக்கத்தில் பிழை அல்லது வேறு ஏதாவது காரணமா? என பல்வேறு சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும் காலம் நெருங்கிவிட்டது. இந்தியா சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பில் உறுப்பினராக உள்ளது. மேலும் விதிமுறைகளின்படி, உறுப்பு நாடுகள் விபத்துகள் குறித்த முதற்கட்ட அறிக்கைகளை 30 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அந்த விதிமுறையின் கீழ் விசாரணை துரிதப்படுத்தப்பட்டு, மத்திய அரசிற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

விபத்து

இந்த கோர விபத்து 260 உயிர்களை பலி வாங்கியது

ஜூன் 12 ஆம் தேதி, லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம், போயிங் 787 ட்ரீம்லைனர், புறப்பட்ட சில நொடிகளில் அகமதாபாத்தில் உள்ள பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்தின் மீது மோதியது. இந்த துயரச் சம்பவத்தில், 241 பயணிகள் மற்றும் பணியாளர்கள் மற்றும் தரையில் இருந்த 19 பேர் உட்பட 260 பேர் உயிரிழந்தனர்.

அறிக்கை

புலனாய்வு அறிக்கை சமர்ப்பிப்பு

இந்த பயங்கர விபத்தை விசாரித்து வரும் விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AAIB), அமெரிக்காவை தளமாகக் கொண்ட தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) மற்றும் போயிங் நிறுவனத்தின் நிபுணர்களுடன் இணைந்து, இந்த வார தொடக்கத்தில் நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் விளக்கம் அளித்தது. விபத்துக்கு என்ன வழிவகுத்தது என்பது பற்றிய ஆழமான நுண்ணறிவை வழங்குவதில் முக்கியமான கருப்புப் பெட்டியின் பகுப்பாய்வு, டெல்லியில் உள்ள AAIB ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குழுவிடம் கூறப்பட்டது. விபத்துக்குப் பின்னர், விபத்துக்கு என்ன வழிவகுத்தது என்பது குறித்து பல கோட்பாடுகள் எழுந்துள்ளன. இது உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது.