திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்கு 308 வயது
திருப்பதி ஏழுமலையான் கோயில் என்றாலே நமது நினைவிற்கு வருவது அங்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டு தான். இந்த லட்டுவை 'ஸ்ரீவாரி லட்டு' என்று அழைக்கப்படும் நிலையில், இந்த பிரசாதத்தில் இறைவனின் பரிபூரண அருள் இருப்பதாக பக்தர்களால் நம்பப்படுகிறது. இந்த லட்டினை செய்வதற்காகவே 500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கோயில் தேவஸ்தானத்தால் நியமிக்கப்பட்டுள்ளனர். முந்தைய காலங்களில் கைகளால் பிடிக்கப்பட்ட லட்டு தற்போது மெஷின் கொண்டு தயார் செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கிறது. 300 ஆண்டுகளுக்கு முன்னர் திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு பூந்தியினை பிரசாதமாக வழங்கியுள்ளனர். அதன் பின், 1715ம் ஆண்டு ஆகஸ்ட்.,2ம் தேதி முதல் தான் பூந்திக்கு பதில் லட்டுவினை பிரசாதமாக கொடுத்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
திருப்பதியில் 3 வகையான லட்டுகள் தயாரிப்பு
இதனிடையே கடந்த 2015ம் ஆண்டு திருப்பதி லட்டுவுக்கு புவிசார் காப்புரிமை வழங்கப்பட்ட நிலையில், இந்தியாவில் யாரும் திருப்பதி லட்டு என்னும் பெயரில் லட்டுவினை தயார் செய்யக்கூடாது என்று கூறப்பட்டது. இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்றோடு(ஆகஸ்ட்.,2) இந்த லட்டு விநியோகமானது துவங்கி 307 ஆண்டுகள் நிறைவுற்று 308ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. திருப்பதியில் 3 வகையான லட்டுகள் தயாரிக்கப்படுகிறார்களாம். அதன்படி, 1750 கிராம் எடை கொண்ட ஆஸ்தான லட்டு முதன்மையான திருவிழா நாட்களில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. இன்னொன்று 175 கிராம் எடையில் கவுண்டர்களில் பக்தர்களுக்கு வழங்குவதற்காக செய்யப்படும் லட்டு. 3வது லட்டு சாமிக்கு நெய்வேத்யம் செய்வதற்காக தயாரிக்கப்படும் ப்ரோக்தம் லட்டு என்பது குறிப்பிடத்தக்கது.