வெளிநாடு பயணங்களை மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழகம் திரும்புகிறார்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு மாநிலம் சென்னையில் 2024ம்ஆண்டு ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கவுள்ளது.
இந்த மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவும், தமிழகத்தில் தொழிலுக்கான முதலீடுகளை ஈர்க்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த 23ம்தேதி 9 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றார்.
அதன்படி, சிங்கப்பூர் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துக்கொண்ட மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
தொடர்ந்து, ஜப்பானின் டோக்கியோ மாநகரில் வெளிநாட்டு வர்த்தக அமைப்பு தலைவரான இஷிகுரோ நோரிஹிகோ, செயல் துணை தலைவர் கசுயா நகஜோ மற்றும் வர்த்தக அமைப்புடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு மேற்கொண்டு பேசியுள்ளார்.
இதனையடுத்து மொத்தம் ரூ.818 கோடி 90 லட்சம் மதிப்பீடான முதலீட்டிற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது என்று செய்திகள் வெளியானது.
சுற்றுப்பயணம்
தானியங்கி இரத்த அழுத்த மானிடர்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை
இதனை தொடர்ந்து, நேற்று(மே.,30) ஜப்பான் முன்னணி நிறுவனமான ஓம்ரான் ஹெல்த்கேர் இந்தியாவுடன் முதன்முறையாக புதிய தொழிற்சாலையினை நிறுவ முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும் ஜப்பானின் ஓம்ரான் ஹெல்த்கேர் நிறுவனத்திற்கும் இடையே ரூ.128 கோடி மதிப்பீட்டில் கையெழுத்தாகியுள்ள இந்த ஒப்பந்தத்தின் படி, தானியங்கி இரத்த அழுத்த மானிடர்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை நிறுவப்படவுள்ளது என தெரிகிறது.
கடந்த 9 நாட்கள் வெளிநாடு பயணம் சென்றிருந்த மு.க.ஸ்டாலின் தனது பயணத்தினை நிறைவு செய்துகொண்டு இன்று(மே.,31) இரவு 10 மணியளவில் தமிழகம் திரும்புகிறார் என்று கூறப்பட்டுள்ளது.
இவரின் வருகையினையொட்டி சென்னை விமான நிலையத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட திமுக'வினர் உற்சாக வரவேற்பு அளிப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.