
அதிமுக கட்சியில் அதிருப்தி: இன்று மனம் திறந்து பேசவுள்ளார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்
செய்தி முன்னோட்டம்
ஈரோடு மாவட்டம் கோபியைச் சேர்ந்த அதிமுக MLA மற்றும் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், கட்சியில் நிலவும் அதிருப்தியை ஒட்டி இன்று (செப். 5) கோபியில் அவரது நிலைப்பாட்டை வெளிப்படையாக பகிர உள்ளார் என அறிவித்துள்ளார். நேற்று கோபி அருகே நடைபெற்ற திருமண மண்டப திறப்பு விழாவில் கலந்து கொண்ட செங்கோட்டையன், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், தே.மு.தி.க - பாஜக கூட்டணியில் இருந்து விலகியதைக் குறித்து எழுப்பிய கேள்விக்கு,"அவர் எடுத்த முடிவு அவருடையது. அவரிடம் கேட்பது தான் சரியானது. நான் அதில் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை," என்றார்.
சமாதானம்
கட்சி மேலிடம் சமாதானம் செய்ய முயற்சி?
இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி மீது கடுமையான அதிருப்தி உள்ளதாக கூறப்படும் செங்கோட்டையன், இன்று தனது நிலையை தெளிவாக விளக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், BJP தலைமை அல்லது பழனிசாமி தரப்பினர் தங்களை சமாதானப்படுத்த முயன்றார்களா என்ற கேள்விக்கு, "இதைப் பற்றிய முழுமையான பதிலை செப். 5ல் கூறுவேன் என ஏற்கனவே தெரிவித்துள்ளேன். அதன்படி, நாளை விரிவாக பேசுவேன்," எனக் கூறியபோது, செய்தியாளர்களிடம் கைகூப்பி வணங்கினார். செங்கோட்டையனின் அறிக்கை, அதிமுகவின் வட்டாரத்தில் அதிர்வலைகள் ஏற்படும் என உள்ளதாகக் கூறப்படுகிறது.