130 மில்லியன் டாலர்கள் மதிப்புடைய கடன் பத்திரங்களை திரும்பப் பெறுகிறது அதானி துறைமுகம்!
அதானி குழுமத்தைச் சேர்ந்த நிறுவனமான அதானி துறைமுகம் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலமானது குறிப்பிட்ட கடன் பத்திரங்களைத் திரும்பப் பெறவிருப்பதாக அறிவித்திருக்கிறது. 2024-ல் செலுத்தவேண்டிய கடனில் சிறிதளவை திருப்பிச் செலுத்தும் திட்டத்தில் ஒரு பகுதியாக இதனை அறிவித்திருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் அதானி குழுமம் குறித்த ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து அந்நிறுவனப் பங்குகள் கடும் சரிவைச் சந்தித்தன. இதனைத் தொடர்ந்து முதலீட்டாளர்களுக்கு தங்கள் நிறுவனத்தின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்க, தங்களுடைய கடன்களை முன்கூட்டியே செலுத்தவிருப்பதாக கடந்த மாதம் அறிவித்தது அதானி குழுமம். அதற்கான முயற்சிகளை தற்போது முன்னெடுத்து வருகிறது அக்கழுமம்.
அதானி குழுமத்தின் திட்டம் என்ன?
அதானி துறைமுகம் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம் மற்றும் அதானி கிரீன் எனர்ஜி ஆகிய இரு நிறுவனங்களிடமும் இரண்டு பில்லியன் டாலர்கள் மதிப்புடைய வெளிநாட்டு நாணய பத்திரங்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பத்திரங்களில் 130 மில்லியன் டாலர்கள் மதிப்புடைய பத்திரங்களை தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்பதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம். இதனைக் கொண்டு குறிப்பிட்ட கடன்களை திருப்பிச் செலுத்த அந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. நடப்பு காலாண்டில் 250 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதல் 300 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரையிலான கடன்களை திருப்பிச் செலுத்த அந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. இதே போல் இனி வரும் காலாண்டுகளிலும் கொஞ்சம் கொஞ்சமாக கடனைத் திருப்பிச் செலுத்தும் முடிவில் இருக்கிறது அதானி குழுமம்.