மீண்டும் தலைவராக நடிகர் கமல்ஹாசன்; மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு ஒருமனதாக தேர்வு
மக்கள் நீதி மய்யம் கட்சியின் இரண்டாவது பொதுக்குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் சனிக்கிழமை (செப்டம்பர் 21) தொடங்கி நடைபெற்று வருகிறது. 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடாத மக்கள் நீதி மய்யம் திமுகவுடன் கூட்டணி அமைத்து அந்த கட்சிக்கு ஆதரவாக நடிகர் கமல்ஹாசன் மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்தார். இதற்கு பிரதிபலனாக மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு மாநிலங்களவை இடம் வழங்கப்பட உள்ளது. இந்த தேர்தலுக்கு பிறகு நடக்கும் முதல் பொதுக்குழு கூட்டம் இது எனும் நிலையில், இதில் கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்ல மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது. இதற்கிடையே, இந்த கூட்டத்தில் கமல்ஹாசன் மீண்டும் கட்சியின் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்த கமல்ஹாசன்
இந்த கூட்டத்தில் நடிகர் கமல்ஹாசன் பேசுகையில், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ஆபத்தானது, குறைபாடுகள் நிறைந்தது என்றும் அதன் வடுக்கள் இன்னும் சில நாடுகளில் உள்ளன என்றார். எனவே இந்தியாவுக்கு இது தற்போதும் தேவையில்லை, எதிர்காலத்திலும் தேவையில்லை என்று கூறினார். மேலும், எந்தவொரு கட்சியையும் தலைவரையும் நேரடியாக குறிப்பிடாமல், 2014 அல்லது 2015ல் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டிருந்தால், சர்வாதிகாரம், பேச்சு சுதந்திரம் பறிபோய், ஒரு தலைவரின் ஆதிக்கத்திற்கு வழிவகுத்திருக்கும் என்று கமல்ஹாசன் கூறினார். ஒரே நேரத்தில் தேர்தல் குறித்து கருத்து தெரிவித்தபோது, ஐரோப்பா மற்றும் ரஷ்யாவை கமல்ஹாசன் சுட்டிக்காட்டிய போதிலும், அது தோல்வியடைந்த எந்த ஒரு நாட்டையும் அவர் நேரடியாக குறிப்பிடவில்லை.