நாடாளுமன்ற பாதுகாப்பு மீறலில் மூளையாக செயல்பட்ட ஆறாம் நபர் டெல்லி போலீசில் சரண்
தேசத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் விவகாரத்தில், நால்வர் கைது செய்யப்பட்ட நிலையில், இதற்கு மூளையாக இருந்த நபர் போலீசால் தேடப்பட்டு வந்தார். லலித் ஜா என பெயர் கொண்ட அந்த நபர், டெல்லி போலீசில் தற்போது சரணடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. டெல்லி கர்தவ்யா பாதையில் உள்ள காவல் நிலையத்திற்குச் நேரில் சென்று சரணடைந்ததாக கூறப்படுகிறது. உடனே அவரை முறைப்படி கைது செய்யப்பட்டு, புது தில்லி மாவட்ட காவல்துறை சிறப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கொல்கத்தாவைச் சேர்ந்த ஆசிரியரான லலித் ஜா, நாடாளுமன்ற அத்துமீறல் நடைபெற்ற உடன் கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் தலைமறைவாக இருந்த பின்னர், தற்போது டெல்லியில் சரணடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லலித் ஜா எப்படி கைது செய்யப்பட்டார்?
இரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற நாடாளுமன்ற அத்துமீறல் விவகாரத்தில், தன்னுடைய கூட்டாளிகள் நடத்திய அத்துமீறல்களை செல்போனில் படம் பிடித்த லலித் ஜா, அதை எடுத்துக்கொண்டு, பஸ் மூலம் ராஜஸ்தானின் நாகௌரை அடைந்தார். அங்கு அவர் தனது இரு நண்பர்களை சந்தித்து, அங்குள்ள ஒரு இரவு விடுதியில் தங்கியுள்ளார். ஆனால் விரைவில், போலீசாரால் தான் தேடப்படுவதை உணர்ந்த லலித் ஜா, தானே சரணடைய முடிவெடுத்து, மீண்டும் டெல்லிக்கு பேருந்தில் பயணப்பட்டு வந்துள்ளார் என்று டெல்லி போலீசார் முதற்கட்ட விசாரணையில் தெரிவித்தனர். அவரை கைது செய்த காவல்துறை தங்களுடைய விசாரணையை தொடக்கி உள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவிக்கிறது.
யார் இந்த லலித் 'மோகன்' ஜா?
கொல்கத்தாவை தளமாகக் கொண்ட ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் தன்னை இணைத்து கொண்டுள்ள லலித் மோகன் ஜா, ஒரு ஆசிரியர். இவர் தான் இந்த அத்துமீறல் விவகாரத்தில் மூளை என தெரிந்த பின்னர், லலித் ஜா பற்றிய கூடுதல் தகவல்களைப் பெற, தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு, அந்த தன்னார்வ தொண்டு நிறுவனர் நீலாக்ஷ் ஐஷைத் தொடர்பு கொண்டது என்று செய்தி நிறுவனம் PTI தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அத்துமீறலை படம்பிடித்த பிறகு, அந்த வீடியோ பதிவு செய்து நீலாக்ஷ் ஐஷுக்கு, லலித் ஜா அனுப்பியதாக போலீசார் தெரிவித்தனர்.
கொல்கத்தாவில் கைது செய்ய திட்டம்?
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அத்துமீறலை செல்போனில் படம்பிடித்த பிறகு, அந்த வீடியோ பதிவு செய்து நீலாக்ஷ் ஐஷுக்கு, லலித் ஜா அனுப்பியதாக போலீசார் தெரிவித்தனர். அதனால், லலித் ஜா, கொல்கத்தாவிற்கு வரக்கூடும் என யூகித்து, அவரை கைது செய்ய டெல்லி போலீஸ் குழு ஏற்கனவே கொல்கத்தாவில் தயார் நிலையில் இருந்துள்ளனர். கடந்த புதன்கிழமை, லலித் ஜா மற்றும் கலகக்காரர்கள் நான்கு பெரும் பாராளுமன்றத்திற்கு வந்துள்ளனர். அவர்களுக்கு உள்ளே நுழைய இரண்டு பாஸ்கள் மட்டுமே கிடைக்கவே, சாகர், மனோரஞ்சன், நீலம் மற்றும் அமோல் ஆகிய நால்வரின் மொபைல் போன்களையும் தன்னுடன் வைத்துக்கொள்ள லலித் முடிவு செய்து, அவர்களை உள்ளே அனுப்பியதாக கூறப்படுகிறது.
எதற்காக இந்த அத்துமீறல்?
முதற்கட்ட விசாரணையில், இந்த அத்துமீறலின் நோக்கம், அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயிகளின் அவலநிலை மற்றும் மணிப்பூரில் உள்ள நிலைமையை பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் நினைத்ததாகவும், அதற்கு இது போன்றதொரு போராட்டம் செய்தால், நாடு முழுவதும் இந்த விவகாரங்கள் கவனம் பெறும் என நினைத்ததாகவும், NDTV செய்தி தெரிவிக்கிறது. இந்தக் குழு விடுதலை போராட்ட வீரர் "பகத் சிங்கின் ரசிகர்கள்" என்ற பேஸ்புக் பக்கத்தின் அங்கத்தினர் எனவும் கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் UAPA மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.