பாராளுமன்றத்தில் இரட்டை பாதுகாப்பு மீறலில் ஈடுபட்ட நால்வர் அடையாளம் காணப்பட்டனர்: டெல்லி காவல்துறை
மக்களவையில் இன்று மதியம், பாதுகாப்புகளை மீறி, நாடாளுமன்றத்தினரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட இரு நபர்கள்: சாகர் சர்மா மற்றும் 35 வயதான டி மனோரஞ்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. NDTV வெளியிட்ட செய்தியின்படி, இவர்களை தவிர, பாராளுமன்றத்திற்கு வெளியே கோஷங்களை எழுப்பியபடி, புகை குண்டுகளை ஏந்தி வந்த இரு பெண்கள்: நீலம்(42 வயது) மற்றும் அமோல் ஷிண்டே (25 வயது) என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில், மனோரஞ்சன் மைசூரைச் சேர்ந்தவர் என்றும், நகரக் கல்லூரியில் கணினி அறிவியலில் பட்டம் பெற்றவர் என்றும் கூறியுள்ளனர். நீலம், ஹரியானாவின் ஹிசாரைச் சேர்ந்தவர், சிவில் சர்வீசஸ் நுழைவுத் தேர்வுக்கு படித்து வருகிறார் என்றும் கூறப்பட்டுள்ளது.
தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை
தற்போது, பாதுகாப்பு மீறலில் ஈடுபட்ட 4 பேரையும் கைது செய்து, டெல்லி காவல்துறையின் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோரா உட்பட உயர் அதிகாரிகள் பாராளுமன்றத்திற்கு நேரில் விரைந்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அவர்களிடம், கலகக்காரர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட புகை குப்பிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதுவரை நடந்தது..
பாராளுமன்றத்திற்குள் பிடிக்கப்பட்ட கலகக்காரர்களிடமிருந்து, பார்வையாளர் அனுமதிச்சீட்டு மீட்கப்பட்டது. அது, கர்நாடகாவின் மைசூருவைச் சேர்ந்த பாஜக எம்.பி., பிரதாப் சிம்ஹா அலுவலகத்திலிருந்து வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் வீசப்பட்ட புகை மஞ்சள் நிறத்தில் இருந்ததாகவும், அதே நேரத்தில், நீலம் மற்றும் அமோல் ஆகியோர் பாராளுமன்றத்திற்கு வெளியே சிவப்பு மற்றும் மஞ்சள் நிற வாயு குப்பிகளை ஏற்றி, சர்வாதிகாரத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும், இந்த இரண்டு சம்பவங்களும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருக்கலாம் என டெல்லி போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
வண்ண வாயு குப்பிகள் என்றால் என்ன?
ஸ்மோக் கேன்கள் அல்லது புகை குண்டுகள் பெரும்பாலான நாடுகளில் சட்டபூர்வமானவை மற்றும் கிட்டத்தட்ட அனைத்து சில்லறை சந்தைகளிலும் கிடைக்கின்றன. அவற்றின் பயன்பாடு நோக்கத்தைப் பொறுத்து மாறுபடும். இந்த கேன்கள் ராணுவ வீரர்களாலும், பொதுமக்களாலும் விளையாட்டு நிகழ்வு அல்லது போட்டோஷூட்டில் பயன்படுத்தப்படுகின்றன. புகை குண்டுகளில் இருந்து வெளிப்படும் அடர்த்தியான புகையால் உருவாகும் புகை திரைகள், இராணுவ மற்றும் சட்ட அமலாக்க நடவடிக்கைகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.
புகைப்படம் எடுக்க பயன்படுத்தப்படும் புகை குப்பி
அடர்ந்த புகை மேகங்கள் துருப்புக்களின் நடமாட்டத்தை மறைத்து, எதிரிகளின் கண்களுக்குப் புலப்படாதவாறு, ராணுவத்தினர் தப்பி செல்ல ஒரு மறைவை வழங்குகின்றன. வான்வழித் தாக்குதல்கள், துருப்புக்கள் தரையிறங்குதல் மற்றும் வெளியேற்றும் இடங்களுக்கு இலக்கு மண்டலங்களைக் குறிப்பதிலும், இவ்வகை வண்ண புகை குப்பிகள் பயன்படுத்தப்படுகின்றன. பொதுமக்கள் பயன்பாட்டில், புகைப்படம் எடுக்கும்போது, பனிப்புகை மூட்டத்திற்கான விளைவுகள் உருவாக்க புகை கேன்கள் பயன்படுத்தப்படுகிறது. விளையாட்டுகளில், குறிப்பாக கால்பந்தில், அந்தந்த கிளப்புகளின் வண்ணங்களைக் காட்ட ரசிகர்கள் புகைக் குப்பிகளைப் பயன்படுத்துகின்றனர்.