மக்களவையில் பாதுகாப்பு விதிமீறல்: பார்வையாளர்கள் கேலரியில் இருந்து குதித்த மர்ம நபர்கள்
இன்று, டிசம்பர் 12, பிற்பகல் 1.02 மணியளவில் பாராளுமன்றத்தில் பூஜ்ஜிய நேரத்தின் போது அடையாளம் தெரியாத இருவர், கைகளில் மஞ்சள் புகையை உமிழும் புகைக் குப்பிகளை ஏந்திக்கொண்டு, பார்வையாளர்கள் கேலரியில் இருந்து லோக்சபா அறைக்குள் குதித்து ஓடினர். அவையில் இருந்த CCTV-இல் பதிவான காட்சிகள் படி, ஒரு நபர், அடர் நீல நிற சட்டை அணிந்து, பிடிபடுவதை தவிர்ப்பதற்காக மேசைகள் மீது தாவி, சபாநாயகரை நோக்கி ஓடுவது போலவும், மற்றொரு வீடியோ காட்சியில் பார்வையாளர்களின் கேலரியில் புகை வீசி இருப்பது போலவும் பதிவாகியுள்ளது. இந்த மர்ம நபர்கள் இருவரையும் எம்.பி.க்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் கைப்பற்றினர்.
மக்களவையில் குதித்த மர்ம நபர்
டெல்லி காவல்துறை விசாரிக்கும் என சபாநாயகர் அறிவித்தார்
அதன்பின்னர், மக்களவை பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் தொடங்கியது. அப்போது, சபாநாயகர் ஓம் பிர்லா சுருக்கமான அறிக்கையை வெளியிட்டார். "இந்த விஷயத்தை விசாரித்து வருகிறோம். தீவிர விசாரணைக்கு உத்தரவிடுமாறு டெல்லி காவல்துறையைக் கேட்டுள்ளோம்," என்று அவர் அவையில் இருந்த எம்.பி.க்களிடம் கூறினார். முன்னதாக, ANI செய்தி நிறுவனத்தால் பகிரப்பட்ட அதிர்ச்சியூட்டும் காட்சிகளில், மர்ம ஆசாமிகள் குதிப்பதற்கு சில வினாடிகளுக்கு முன்பு, அமைதியாக நடைபெற்று கொண்டிருந்த அவையில், திடீரென யாரோ, "அவரைப் பிடிக்கவும், அவரைப் பிடிக்கவும்" என்ற கூச்சலிடுவது கேட்கிறது. அப்போது அவையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள் ஹர்தீப் சிங் பூரி, அனுப்ரியா படேல் ஆகியோரும் இருந்துள்ளனர்.
22 ஆண்டுகளுக்கு முன்னர்..
இந்தியாவின் நாடாளுமன்றத்தை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடைபெற்று, இன்றுடன் 22 ஆண்டுகள் நிறைவுற்றுள்ளது. இந்த சூழலில் இந்தியாவின் பிரதான மக்களவை மன்றத்தில் இது போன்ற பாதுகாப்பு குறைபாடு இருப்பது பலரையும் யோசிக்க வைத்துள்ளது. மேலும், காலிஸ்தான் பிரிவினைவாதி பண்ணுன் சில தினங்களுக்கு முன்னர், இந்த நாடாளுமன்ற தாக்குதலின் நினைவு தினத்தை முன்னிட்டு, மற்றுமொரு தாக்குதல் நடைபெறும் என எச்சரிக்கை விடுத்தும் குறிப்பிடத்தக்கது. தற்போது கைது செய்யப்பட்டுள்ள அந்த மர்ம நபர்களுக்கும், இந்த அச்சுறுத்தலுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது போலீஸ் விசாரணைக்கு பின்னர் தெரியவரும்.
சம்பவத்தை நேரில் கண்ட மக்களவை உறுப்பினர்கள் கூறுவது என்ன?
பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி டேனிஷ் அலி, என்டிடிவியிடம் தெரிவித்ததால் படி, பிடிபட்ட நபர்களின் பார்வையாளர் அனுமதிச் சீட்டு மீட்கப்பட்டதாகவும், அது பாஜக எம்பி பிரதாப் சிம்ஹாவின் அலுவலகத்தால் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார். எவ்வாறாயினும், எந்த எம்.பி அலுவலகம் அனுமதிச் சீட்டை வழங்கினாலும், எந்தவொரு பார்வையாளர்களும், பாராளுமன்றத்திற்குள் அனுமதிக்கப்படுவதற்கு முன் ஐந்து நிலை பாதுகாப்பை தாண்டி தான் வர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம், "பார்வையாளர்கள் கேலரியில் இருந்து யாரோ கீழே விழுந்ததாக முதலில் நினைத்தேன். இரண்டாவது நபர் குதித்த பிறகுதான் அது பாதுகாப்புக் கோளாறு என்பதை உணர்ந்தேன்... வாயு விஷமாக இருந்திருக்கலாம்," என்று அவர் முழுமையான விசாரணைக்கு அழைப்பு விடுத்தார்.