ஆவின் நிறுவன பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் விநியோகம் 50%மாக குறைப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழக மக்களுக்கு பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையமான ஆவின் விற்பனை செய்து வருகிறது.
இந்நிறுவனம் நாள் ஒன்றுக்கு 30 லட்சம் லிட்டர் பாலினை கொள்முதல் செய்வதாகவும், சென்னையில் மட்டும் 15 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.
கொழுப்புசத்தின் அடிப்படையில் இந்நிறுவனம் பாலை ஆரஞ்சு, பச்சை, நீலம் உள்ளிட்ட நிறங்களில் விற்பனை செய்து வரும் நிலையில் 4.5% கொழுப்புசத்து கொண்ட நிலைப்படுத்தப்பட்ட பச்சை நிற பாலின் விநியோகத்தினை 50% குறைத்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
இதனிடையே, ஆளும்கட்சி திமுக அளித்த வாக்குறுதிப்படி பச்சை நிறப்பால் பாக்கெட்டின் விலை ரூ.3 குறைக்கப்பட்டு அரைலிட்டர் பால் ரூ.22க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆவின்
விநியோகம் குறைக்கப்படவில்லை - ஆவின் நிர்வாகம் மறுப்பு
இதனால் லிட்டருக்கு ரூ.7ஆவின் நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்படுவதால் தான் விநியோகம் குறைக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
மேலும், அதனை ஈடுசெய்யவே ஊதா நிறத்தில் 3.5%கொழுப்புசத்து கொண்ட சமன்படுத்தப்பட்ட பாலினை ஆவின் அறிமுகம் செய்துள்ளது.
இதனைத்தொடர்ந்து, விரைவில் பச்சைநிற பால் பாக்கெட்டுகளின் விநியோகம் 70%மாக குறைக்கப்படப்போவதாக கூறப்படுவதால் பொதுமக்களும், பால் முகவர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து சென்னை பால் முகவர்கள் கூறுகையில், பச்சைநிற பால் பாக்கெட்டினை விட ஊதா நிறப்பாலின் கொழுப்புசத்து குறைவு என்பதால் மக்கள் தனியார் நிறுவன பாலினை வாங்கி செல்வதாக கூறியுள்ளனர்.
இந்நிலையில், ஆவின் நிறுவன மேலாண்மை இயக்குனரான வினீத் இதுகுறித்து கூறுகையில், அனைத்து வகையான பால் பாக்கெட்டுகளையும் மக்களுக்கு தடையின்றி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எவ்வகை பாலின் விநியோகமும் குறைக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.