ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கு - முக்கிய நபர்களின் வங்கி கணக்குகள் முடக்கம்
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் சென்னை-அமைந்தகரையை தலைமையிடமாக கொண்டு திருவள்ளூர், திருவண்ணாமலை, போன்ற பலயிடங்களில் ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனம் செயல்பட்டுவந்தது.
இந்நிறுவனத்தில் 1லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.36ஆயிரம் வட்டி வழங்கப்படும் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
அதனை நம்பி கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 9,255பேரிடம் ரூ.2,438கோடி பெற்று மோசடி செய்துள்ளார்கள்.
பாஜக விளையாட்டு பிரிவு மாநில செயலாளராக இருந்த ஹரிஷ் கைதுச்செய்யப்பட்ட நிலையில் அவரிடம் நடத்திய விசாரணையில், பாஜக விளையாட்டுப்பிரிவில் முக்கிய பதவியினைப்பெற அக்கட்சி நிர்வாகிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்நிலையில் சென்னையில் பொருளாதாரக்குற்றப்பிரிவு ஐஜி.,ஆசியம்மாள் இன்று(ஏப்ரல்.,28) செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
அப்போது அவர் ஆருத்ரா நிதிநிறுவன மோசடி வழக்கில் முக்கிய நபர்களின் வங்கிக்கணக்குகளில் உள்ள ரூ.96கோடி முடக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
பேட்டி
நடிகர் ஆர்.கே.சுரேஷ் உட்பட 4 பேருக்கு லுக் அவுட் நோட்டீஸ்
அதனைத்தொடர்ந்து அவர், இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 13பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
ரூ.6.35கோடி ரொக்கம், ரூ.1.13கோடி மதிப்பிற்கு தங்கம், வெள்ளிப்பொருட்கள், 22கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நிறுவன இயக்குனர்கள், முக்கிய ஏஜெண்டுகளின் அசையா சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இந்த வழக்கு தொடர்பாக விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும்.
மேலும் ஹிஜாவு நிதிநிறுவன மோசடி வழக்கில் 48இடங்களில் சோதனை மேற்கொண்டு ரூ.3.34லட்சம், ரூ.25லட்சம் மதிப்புள்ள 448கிராம் தங்கநகைகள், ரூ.75 ஆயிரம் மதிப்பிலான வெள்ளிப்பொருட்கள் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
குற்றவாளிகளுக்கு சொந்தமான 162 வங்கி கணக்குகளில் இருந்த ரூ.14.47 கோடி முடக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
ஆருத்ரா நிதிநிறுவன மோசடி வழக்கில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் உட்பட 4 பேருக்கு லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.