தேர்தலின் போது தூர்தர்ஷனில் விளம்பரம் செய்ய டிஜிட்டல் வவுச்சர்கள் அறிமுகம்
இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் ஆன்லைன் மூலம் டிஜிட்டல் நேர வவுச்சர்களைப் பெறுவார்கள் என்று இந்திய தேர்தல் ஆணையம் நேற்று(ஜூலை 19) அறிவித்தது. தேர்தலின் போது அரசியல் கட்சிகள் அரசுக்கு சொந்தமான மின்னணு ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கான தற்போதைய திட்டத்தை தேர்தல் ஆணையம் திருத்தியுள்ளது. சமீபத்தில், அரசியல் காட்சிகளுக்கு சொந்தமான வரவு செலவு, தேர்தல் செலவு அறிக்கைகள் போன்றவற்றை ஆன்லைனில் தாக்கல் செய்யவதற்கான ஒரு புதிய இணையதளத்தை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியது. இதனை தொடர்ந்து, தற்போது, "தேர்தலின் போது அகில இந்திய வானொலி(AIR) மற்றும் தூர்தர்ஷன்(DD) ஆகியவற்றில் அரசியல் கட்சிகளுக்கு நேரம் ஒதுக்குவது இனி ஆன்லைனில் இருக்கும்" என்று தேர்தல் ஆணையம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதற்கான முடிவுகளை தேர்தல் ஆணையமும் பிரசார் பாரதி கார்ப்பரேஷனும் எடுக்கும்
ஒரு தகவல் தொழில்நுட்ப(IT) தளம் மூலம் டிஜிட்டல் நேர வவுச்சர்களை வழங்குவதற்கான ஏற்பாட்டை அறிமுகப்படுத்தியதன் மூலம் அரசியல் கட்சிகள் விளம்பரம் செய்வதற்கான நேரம் ஒதுக்கப்பட உள்ளது. எனவே, அரசியல் கட்சிகள் இனி தேர்தல் ஆணையத்திற்கு நேரில் வந்து நேர வவுச்சர்களை பெற தேவையில்லை என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல்களின் போது அரசாங்கத்திற்குச் சொந்தமான மின்னணு ஊடகங்களை அரசியல் கட்சிகள் சமமாக பயன்படுத்த வேண்டும் என்பதற்காக, தேசிய மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகளுக்கு ஒரே அளவிலான விளம்பர நேரம் வழங்கப்படும். கூடுதல் நேரம் வழங்கப்படுவதற்கு முன், அந்த குறிப்பிட்ட கட்சிகள் சென்ற தேர்தலில் எவ்வளவு ஓட்டுகளை வாங்கியிருக்கிறது என்பது கருத்தில் எடுத்துக்கொள்ளப்படும். இதற்கான முடிவுகளை தேர்தல் ஆணையமும் பிரசார் பாரதி கார்ப்பரேஷனும் எடுக்கும்.