முன்னாள் டிஜிபியின் பெயரை வைத்து பேஸ்புக்கில் மோசடி செய்த கும்பல்
புதிதாக பிரிக்கப்பட்ட சென்னை தாம்பரம் மாநகர காவல்துறையின் முதல் காவல் ஆணையராக பணியாற்றி ஓய்வு பெற்ற எம்.ரவியின் பெயரை வைத்து பேஸ்புக்கில் மோசடி நடந்ததாக புகார் எழுந்ததை அடுத்து, சைபர் குற்றப்பிரிவு போலீஸார் அதை விசாரித்து வருகின்றனர். தன் பெயரில் போலியான பேஸ்புக் கணக்கு ஒன்றை உருவாக்கி, மோசடி கும்பல் ஒன்று பொதுமக்களை ஏமாற்றி வருவதாக முன்னாள் டிஜிபி எம்.ரவி புகார் அளித்துள்ளார். அந்த மோசடி கும்பல், தனது பேஸ்புக் பாலோவர்களிடம் பர்னிச்சர் பொருட்களை வாங்குமாறு பரிந்துரை செய்து ஏமாற்றி வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த மோசடி சென்னை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இது குறித்து, டிஜிபி ரவியின் நண்பர்கள் அவரிடம் தெரிவிக்கவே, அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன் பிறகு, சைபர் குற்றப்பிரிவு போலீஸாரிமும் பேஸ்புக்கிலும் புகார் அளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். முன்னாள் போலீஸ் அதிகாரியின் பெயரில் நடந்திருக்கும் இந்த மோசடி சென்னை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தந்தி டிவி செய்தி நிறுவனத்திடம் பேசிய டிஜிபி ரவி, "சமூக வலைத்தளங்களில் நண்பர்களை சேர்க்கும் போது மக்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாக, பண பரிவர்த்தனை செய்ய சொல்லி சமூக வலைத்தளத்தில் உள்ள யார் கேட்டாலும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.