சிவகங்கையில் நடந்துவரும் 9ம் கட்ட அகழாய்வு பணி - 183 தொல்பொருட்கள் கண்டெடுப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு மாநில மக்களின் பண்டையக்கால வாழ்க்கை முறை, கலாச்சாரம், நாகரீகம் உள்ளிட்டவற்றினை எடுத்துரைக்கும் வகையில் சிவகங்கை மாவட்டம் திருபுவனம் பகுதியில் கடந்த 2015ம் ஆண்டு முதல் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுவரை 8 கட்ட அகழாய்வு பணிகள் முடிந்துள்ளதையடுத்து, 3 முறை மத்திய தொல்லியல்துறையும், 5 முறை தமிழக தொல்லியத்துறையும் இதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.
இதில் பல்லாயிர தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவை அனைத்தையும் பொதுமக்கள் பார்வையிட ஏதுவாக ரூ.18.42 கோடி மதிப்பீட்டில் கீழடியில் ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு அதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த மார்ச் மாதம் திறந்து வைத்தார்.
இதனையடுத்து தற்போது 9ம் கட்ட அகழாய்வு பணிகள் துவங்கப்பட்டு நடந்து வருகிறது.
அகழாய்வு
கண்டெடுக்கப்பட்ட தொல் பொருட்கள் அறிவியல் பகுப்பாய்விற்கு அனுப்பப்படவுள்ளது
இதனைத்தொடர்ந்து 9ம் கட்ட அகழாய்வு பணியில் 9 குழிகள் தோண்டப்பட்டதில், அழகிய வேலைப்பாடுகள் கொண்ட சூடு மண்ணால் செய்த விலங்குகளின் உருவங்கள், தங்க அணிகலன்கள், வட்ட சில்லுகள், செப்பு ஊசி, எலும்பால் செய்யப்பட்ட கூர்முனைகள், ஆட்ட காய்கள், உள்ளிட்ட 183 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், 35 செ.மீ.,ஆழத்தில் 4 அகழாய்வு குழிகளில் 3-6செ.மீ.,தடிமன் கொண்ட களிமண் மற்றும் சுண்ணாம்பு கலவை கொண்டு அமைக்கப்பட்டுள்ள தரைத்தளம் காணப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
இது குறித்து தொல்லியல் துறை அதிகாரிகள், "9ம் கட்ட அகழாய்வு பணிகளில் கிடைத்த எலும்பு மற்றும் கரி மாதிரிகள், பானை ஓடுகள் உள்ளிட்டவை அறிவியல் பகுப்பாய்விற்கு அனுப்பப்படவுள்ளது" என்று கூறியுள்ளனர்.