திருநெல்வேலியில் அதிகனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை-மழை வெள்ளத்தில் பாதுகாப்பாக பிறந்த 91 குழந்தைகள்
குமரிக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென்மாவட்டங்களில் அதிலும் குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது. இதனால் அம்மாவட்ட மக்கள் கடும் வெள்ளத்தில் சிக்கி கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகள் அதிகம். மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கிடையே அதி கனமழை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் மூலம் கொடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கையின் அடிப்படையில் திருநெல்வேலியில் கடந்த 17ம் தேதி காலை முதல் நிறைமாத கர்ப்பிணி பெண்கள் குறித்த விவரங்கள் சுகாதாரத்துறை அதிகாரிகள் மூலம் அம்மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் சேகரிக்கப்பட்டுள்ளது.
ஆட்சியர் கார்த்திகேயன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு
அதன்படி, 696 கர்ப்பிணிகள் நேரடியாக தொடர்புகொள்ளப்பட்டு உடனடியாக மருத்துவமனையில் சேருமாறு அறிவுறுத்தப்பட்டனர். அம்மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட இந்த அதிரடி நடவடிக்கையின் அடிப்படையில் 142 கர்ப்பிணிகள் மாவட்டத்தின் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுள் 91 பேருக்கு இந்த பெருமழை, வெள்ளம் ஏற்பட்ட நேரத்தில் குழந்தைகள் பிறந்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்ட 23 பேரில் 13 பேருக்கும், ஆரம்ப சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்ட 36 பெண்களுள் 14 பேருக்கும் குழந்தைகள் பிறந்துள்ளது. அதேபோல், தனியார் மருத்துவமனையில் சேர்ந்த 56 கர்ப்பிணிகளில் 43 பேருக்கும், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் 37 பேர்களில் 21 பேருக்கும் குழந்தைகள் பிறந்துள்ளது. இந்த தகவல்களை அம்மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.