டைம்ஸ் தரவரிசை பட்டியலில் இடம்பிடித்த 91 இந்திய பல்கலைக்கழகங்கள்
லண்டனில் செயல்படும் டைம்ஸ் ஹையர் எஜுகேஷன் என்னும் இதழ் ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதுமுள்ள பல்கலைக்கழங்களின் தரவரிசை பட்டியலினை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளது. அதன்படி இந்தாண்டிற்கான தரவரிசை பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தரவரிசை பட்டியலானது ஆராய்ச்சி, கற்பித்தல், உலகமயமாக்கல், தொழில்துறை, சர்வதேச வெளிச்சம் உள்ளிட்ட 18 அம்சங்களை கருத்தில் கொண்டு மதிப்பிடப்படுகிறது என்று கூறப்படுகிறது. இப்பட்டியலில் 108 நாடுகளை சேர்ந்த 1,904 பல்கலைக்கழங்கள் இடம்பெற்றுள்ள நிலையில், 91 இந்தியா பல்கலைக்கழங்கள் இடம்பெற்றுள்ளது. கடந்தாண்டு இந்த பட்டியலில் 75 பல்கலைக்கழங்கள் இடம்பெற்றிருந்த நிலையில், இந்தாண்டு எண்ணிக்கை உயர்ந்துள்ளது. குறிப்பாக இதில் 20 புது பல்கலைக்கழங்கள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடவேண்டியவை ஆகும். கடந்த 2017ம்ஆண்டிற்கு பிறகு பெங்களூர் இந்திய அறிவியல் கழகம் முதலிடத்தினை பிடித்துள்ளது.
501-600 பிரிவிற்கு முன்னேறிய சென்னை அண்ணா பல்கலைக்கழகம்
தொடர்ந்து இப்பட்டியலில் சிறந்த செயல்திறன் கொண்ட இந்திய பல்கலைக்கழகங்களுள் சென்னை அண்ணா பல்கலைக்கழகம், மகாத்மா காந்தி பல்கலைக்கழகம், டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம், ஷூலினி பயோடெக்னாலஜி மற்றும் மேலாண்மை அறிவியல் பல்கலைக்கழகம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது. 2ம் இடத்திலுள்ள சென்னை அண்ணா பல்கலைக்கழகம் கடந்தாண்டு 801-1000 பிரிவிலிருந்து 501-600 பிரிவிற்கு முன்னேறி உலகளவில் 600 சிறந்த பல்கலைக்கழகங்களுள் ஒன்றாக தேர்வாகியுள்ளது. அதேபோல் , கோவை பாரதியார் பல்கலைக்கழகம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், வேலூர் விஐடி, சவீதா மருத்துவ பல்கலைக்கழகம் உள்ளிட்டவை 601-800 பிரிவுக்கு முன்னேறியுள்ளது. திருச்சி என்ஐடி 801-1000 பிரிவிலும், கோவை காருண்யா, சென்னை சத்யபாமா. எஸ்.ஆர்.எம்.,மதுரை தியாகராஜ பொறியியல் கல்லூரி, தாம்பரம் கிரேசன்ட், ஆவடி வேல்டெக் உள்ளிட்டவை 1201-1500 பிரிவில் இடம்பெற்றுள்ளது.