'பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நடந்தது குண்டு வெடிப்புதான்': முதலமைச்சர் சித்தராமையா
பெங்களூரு குண்டலஹள்ளியில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் இன்று வெடிகுண்டு வெடித்ததால் 9 பேர் காயமடைந்தனர் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் ஏற்பட்ட வெடிவிபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸார் முன்பு தெரிவித்திருந்தனர். அதன் பிறகு, பயங்கரவாத எதிர்ப்பு தேசிய புலனாய்வு ஏஜென்சி(என்ஐஏ), வெடிகுண்டு படை மற்றும் தடயவியல் ஆய்வகத்தின் ஒரு குழு அந்த உணவகத்திற்கு வந்து ஆய்வு செய்தது. அதனை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் சித்தராமையா, ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நடந்த தாக்குதலில் மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் கருவி(ஐஇடி) பயன்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
வாடிக்கையாளர் ஒருவர் விட்டுச் சென்ற பையில் வெடிகுண்டு இருந்ததா?
"மதியம் 12.30 மணியளவில் குண்டு வெடிப்பு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஒரு பை கண்டெடுக்கப்பட்டுள்ளது. அது குறித்து விசாரணை நடந்து வருகிறது. குண்டு வெடிப்பில் ஐஇடி பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. " என்று சித்தராமையா செய்தியாளர்களிடம் கூறினார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் பாஜகவின் பெங்களூரு தெற்கு எம்பி தேஜஸ்வி சூர்யா, "ராமேஸ்வரம் கஃபே நிறுவனர் ஸ்ரீ நாகராஜிடம் உணவகத்தில் ஏற்பட்ட வெடி விபத்து குறித்து பேசினேன். வாடிக்கையாளர் ஒருவர் விட்டுச் சென்ற பையினால் வெடிப்பு ஏற்பட்டது என்றும் சிலிண்டர் வெடிக்கவில்லை என்றும் அவர் என்னிடம் தெரிவித்தார்." என்று கூறியுள்ளார். காயமடைந்த ஒன்பது பேரும் புரூக்ஃபீல்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக கர்நாடக காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.