10 ஆயிரம் பேரிடம் ரூ.800 கோடி வரை மோசடி செய்த நிறுவனம்
சென்னையில் நிறைய வட்டி தருவதாக கூறி சுமார் 10,000 பேரிடம் .800 கோடி ரூபாய் வரை மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த ஹிஜாவு நிறுவன தலைவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். சென்னை கீழ்பாக்கத்தில் இயங்கி வந்த ஹிஜாவு அசோசியேட்ஸ் என்ற தனியார் நிறுவனம், மலேசியாவில் எண்ணெய் கிணறு வைத்திருப்பதாகவும், தங்களிடம் முதலீடு செய்தால் மாதம் 15 சதவீத வட்டி கிடைக்கும் என்றும் விளம்பரம் செய்து வந்தது. இதை நம்பி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் 800 கோடிக்கும் மேல் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். ஆனால், ஹிஜாவு நிறுவனம் அந்த வட்டியை வழங்காமல் முதலீட்டாளர்களை ஏமாற்றி மோசடி செய்தது.
சரணடைந்த நிறுவன தலைவர் சவுந்திரராஜன்
இதனையடுத்து எழுந்த புகார்களின் பேரில் தமிழக பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து அந்த நிறுவனத்தின் நிர்வாகிகள், இயக்குநர்கள் என 6 பேர் கைது செய்தனர். மேலும் அந்த நிறுவனம் மற்றும் அதற்கு தொடர்புடைய நிறுவனங்கள் என்று 32 இடங்களில் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டன. இதற்கிடையில், அந்த நிறுவனத்தின் நிறுவன தலைவர் சவுந்திரராஜன், சென்னை உயர்நீதிமன்றத்தை சேர்ந்த பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். அவரை காவலில் வெளியே எடுத்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர். மேலும், குற்றம்சாட்டப்பட்ட மேலும் 10 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.