ஆடம்பர வாழ்ககையை துறந்து துறவியான வைர வியாபாரியின் மகள்
குஜராத்தில் ஒரு பணக்கார வைர வியாபாரியின் 9 வயது மகள், ஆடம்பர வாழ்க்கையைத் துறந்து நேற்று(ஜன:18) துறவறத்தைத் தழுவினார். ஏழையாக இருந்து பணக்காரர் ஆனவர்களின் கதையை நாம் அடிக்கடி கேள்வி பட்டிருப்போம். ஆனால், பணக்காரர்களாக இருந்து அந்த ஆடம்பரத்தை துறந்து துறவியானவர்களை பார்ப்பது மிகவும் அரிது. அப்படி ஒரு கதை தான் தற்போது சூரத்தில் நடந்திருக்கிறது. தனேஷ் மற்றும் அமி சங்வியின் இரண்டு மகள்களில் மூத்தவரான தேவன்ஷி, சூரத்தின் வெசு பகுதியில் ஜெயின் துறவி ஒருவரின் முன்னிலையில் 'திக்ஷா' செய்து கொண்டார். இவரது தந்தை சூரத்தின் மிக பிரபலமான சங்க்வி-அண்ட்-சன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். இந்த நிறுவனம் சுமார் 30 ஆண்டுகளாக வைர ஏற்றுமதி செய்து வருகிறது.
சிறுவயதில் இருந்து ஆன்மீகத்தின் மீது அதீத நாட்டம்
'திக்ஷா' அல்லது 'துறவற வாக்குறுதி' என்பது அவரது துறவற வாழ்க்கையின் தொடக்கத்தை குறிக்கிறது. இந்த விழா கடந்த சனிக்கிழமை தொடங்கியது. அவரது குடும்பம் வழங்க கூடிய அனைத்து ஆடம்பர வசதிகளையும் பொருட்களையும் இந்த வாக்குறுதிக்கு பின் அவர் புறக்கணிக்க வேண்டும். தேவன்ஷி சிறுவயதிலிருந்தே ஆன்மீக வாழ்க்கையில் நாட்டம் கொண்டிருந்தார் என்றும் துறவறம் தொடங்குவதற்கு முன்பே துறவிகளுடன் 700 கிமீ தூரம் யாத்திரை செய்து முறையாக அவர்களின் வாழ்க்கையைத் தழுவினார் என்றும் அவரது குடும்ப நண்பர் நிரவ் ஷா கூறியுள்ளார். "தேவன்ஷி சிறுவயதில் இருந்தே ஆன்மீக நாட்டம் கொண்டிருந்தாள். சிறு வயதிலிருந்தே துறவு வாழ்க்கையை தான் பின்பற்றி வருகிறாள்" என்று அவர் கூறி இருக்கிறார்.