Page Loader
டெல்லி குழந்தைகள் மருத்துவமனையில் தீ விபத்து: 7 குழந்தைகள் பலி, உரிமையாளர் மீது வழக்கு

டெல்லி குழந்தைகள் மருத்துவமனையில் தீ விபத்து: 7 குழந்தைகள் பலி, உரிமையாளர் மீது வழக்கு

எழுதியவர் Sindhuja SM
May 26, 2024
09:40 am

செய்தி முன்னோட்டம்

டெல்லியின் விவேக் விஹார் பகுதியில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 7 குழந்தைகள் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. அந்த மருத்துவமனையில் மொத்தம் 12 புதிதாகப் பிறந்த குழந்தைகள் இருந்தன. அவற்றில் ஒன்று ஏற்கனவே இறந்துவிட்டது. மேலும், ஆறு குழந்தைகள் தீ விபத்துக்குப் பிறகு இறந்தது. மீதமுள்ள ஐந்து குழந்தைகள் சிகிச்சைக்காக மற்றொரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன என்று போலீசார் தெரிவித்தனர். அந்த குழந்தைகள் மருத்துவமனையின் உரிமையாளரான நவீன் கிச்சி மீது IPC 336, 304A மற்றும் 34 ஆகிய பிரிவுகளின் கீழ் டெல்லி காவல்துறை எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது.

இந்தியா 

இன்று அதிகாலையில் தீ அணைக்கப்பட்டது

நேற்று இரவு 11.30 மணியளவில், குழந்தைகள் மருத்துவமனை மற்றும் அதற்கு அருகிலுள்ள கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டிருப்பதாக விவேக் விஹார் காவல் நிலையத்திற்கு அழைப்பு வந்தது. சம்பவம் குறித்து விசாரணை நடத்த உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இன்று அதிகாலையில் தீ அணைக்கப்பட்டது. மருத்துவமனைக்கு அருகில் இருந்த ஒரு கட்டிடத்திற்கும் தீ பரவியது, ஆனால் அந்த கட்டிடத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று டிஎஃப்எஸ் தலைவர் அதுல் கர்க் கூறினார். மருத்துவமனையின் உள்ளே வைக்கப்பட்டிருந்த பல ஆக்ஸிஜன் சிலிண்டர்களும் தீயில் எரிந்து நாசமானது.