தமிழக போக்குவரத்துத்துறைக்கு 150 தாழ்தள பேருந்துகள் உள்பட 600 புதிய பேருந்துகள்
தமிழ்நாடு மாநிலத்தில் தற்போது 21 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதனுள் 10 ஆயிரம் பேருந்துகள் வாங்கப்பட்டு 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. சமீபத்தில், மத்திய அரசு 15 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்திய வாகனங்களை பயன்படுத்த கூடாது என்று அறிவிப்பினை வெளியிட்டது. இதன் காரணமாக தமிழக அரசு தற்போது பழைய பேருந்துகளுக்கு பதில் புதிய பேருந்துகளை வாங்க முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து அண்மையில் சட்டசபை கூட்டத்தின் போது 1000 பேருந்துகள் வாங்கவுள்ளதாக நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, முதற்கட்டமாக தற்போது தமிழக போக்குவரத்து துறைக்கு 600 புதிய பேருந்துகள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வசதியாகவும், பாதுகாப்பாகவும் பயணம் மேற்கொள்ள நடவடிக்கை
இதனையடுத்து, புதிய பேருந்துகளை வாங்குவதற்கான ஒப்பந்த புள்ளியும் தமிழக அரசு அண்மையில் கோரியுள்ளது. இந்த 600 பேருந்துகளில் 150 பேருந்துகள் முழுக்க முழுக்க தாழ்தள பேருந்துகளாக வாங்கப்படவுள்ளது. இந்நிலையில் பேருந்து பாடி கட்டும் முன்னணி நிறுவனங்கள் பேருந்துகளின் பாடிகளை கட்ட நடந்தப்படவுள்ள டெண்டரில் பங்கேற்கலாம் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொதுமக்கள் வசதியாகவும், பாதுகாப்பாகவும் பயணம் மேற்கொள்ள ஏற்ற பேருந்துகளை வாங்குவதில் போக்குவரத்துத்துறை தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. தொடர்ந்து, புதிய பேருந்துகளை வாங்கும் பணியானது விரைவில் செயல்படுத்தப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது. முன்னதாக, எந்தெந்த வழித்தடங்களில் தாழ்த்தள பேருந்துகளை இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது என்பதை ஆய்வு செய்து அதற்கான அறிக்கையினை அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.