ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்த வயோதிகர் கைது
கடந்த ஆண்டு பாரத் ஜோடோ யாத்திரை மத்தியப் பிரதேசத்திற்குள் நுழைவதற்கு முன்பு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு கொலைமிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டது. அதை அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்ட 60 வயது முதியவர் நேற்று(ஏப் 27) கைது செய்யப்பட்டார். பாரத் ஜோடோ யாத்திரை மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூருக்குள் நுழைந்தவுடன் ராகுல் காந்திக்கு வெடிகுண்டு வைக்கப் போவதாக கடிதம் அனுப்பியவர் மிரட்டல் விடுத்திருந்தார். அந்தக் கடிதம் இந்தூரில் உள்ள ஒரு இனிப்புக் கடைக்கு வெளியே கண்டெடுக்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட தயாசிங் என்ற ஐஷிலால் ஜாம் ரயிலில் தப்பிச் செல்ல உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின்(NSA) கீழ் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 507 இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
ஐஷிலால் ஜாம்மை NSAவின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்திருப்பதாக கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர் ஏன் ராகுல் காந்திக்கு கடிதம் அனுப்பினார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றும், விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் துணை போலீஸ் கமிஷனர் (குற்றப்பிரிவு) நிமிஷ் அகர்வால் கூறியுள்ளார். நவம்பர் 2022 இல் கடிதம் கண்டுபிடிக்கப்பட்ட உடனேயே, அடையாளம் தெரியாத நபர் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 507 இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது.