பல கோடி மதிப்புள்ள வலம்புரி சங்குகளை விற்க முயற்சி - 6 பேர் கைது
தமிழ்நாடு மாநிலம், திருநெல்வேலி மாவட்டம்-ஏர்வாடி பகுதியில் ஓர் வீட்டில் பல கோடி மதிக்கத்தக்க வலம்புரி சங்குகள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்ய முயற்சி செய்வதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் ஒன்று வந்துள்ளது. அந்த தகவலின் பேரில் வனத்துறை அதிகாரிகள் களக்காடு புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட திருக்குறுங்குடி வனசரகம் ஏர்வாடியை சேர்ந்த சண்முகம் என்பவர் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர் என்று கூறப்படுகிறது. இந்த சோதனையின் பொழுது அவரது வீட்டில் அரிய வகையினை சேர்ந்த 2 வலம்புரி சங்குகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை அதிகாரிகள் கண்டறிந்து எடுத்துள்ளனர். இதனையடுத்து சண்முகத்திடன் வனத்துறை அதிகாரிகள் விசாரணையினை துவங்கி உள்ளனர்.
கைது செய்யப்பட்டோர் சிறையில் அடைப்பு
அதிகாரிகள் சண்முகத்திடம் மேற்கொண்ட விசாரணையினை அடுத்து அவரது கூட்டாளிகளான சூரியன், பிரவீன், ராஜன், சரவணன், வீர பெருமாள், ஆறுமுகம் ஆகியோரையும் கைது செய்தனர். இதில் இவர்களுக்கும் சம்பந்தம் உள்ளதா என்னும் கோணத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவர்களிடம் 1.4 கிலோ மற்றும் 1.5 கிலோ எடைக்கொண்ட 2 வலம்புரி சங்குகள் இருப்பது தெரியவந்துள்ளது. அவற்றையும் வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளார்கள். இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட சங்குகளின் மதிப்பு பல கோடி என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட 6 பேரும் நாங்குநேரி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.