குடிபோதையில் இருந்த டிரைவர்: ஹரியானாவில் பள்ளி பேருந்து கவிழ்ந்ததால் 6 குழந்தைகள் பலி
செய்தி முன்னோட்டம்
ஹரியானா மாநிலம் நர்னால் கிராமம் அருகே பள்ளி பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 குழந்தைகள் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
ஈத்-உல்-பித்ர் பண்டிகைக்கு விடுமுறை விடபட்டபோதிலும் ஜிஎல் பப்ளிக் பள்ளி என்ற பள்ளி இயங்கியதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜிஎல் பப்ளிக் பள்ளிக்குச் சொந்தமான பேருந்து கனினாவின் உன்ஹானி கிராமம் அருகே கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 6 குழந்தைகள் உயிரிழந்ததாக மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். காயமடைந்த குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இது தொடர்பாக பேருந்தின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதாக மகேந்திரகரின் காவல் கண்காணிப்பாளர் அர்ஷ் வர்மா தெரிவித்துள்ளார்.
ஹரியானா
விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை
பேருந்தின் ஓட்டுநர் குடிபோதையில் இருந்தாரா என்ற கேள்வி கேட்கப்பட்ட போது, "நாங்கள் அவரைக் கைது செய்துள்ளோம், அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் வந்த பிறகு தான் அவர் குடிபோதையில் இருந்தாரா இல்லையா என்பதை எங்களால் சரியாகக் கண்டறிய முடியும்" என்று அவர் தெளிவுபடுத்தினார்.
விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. ஆனால் பேருந்தின் தகுதிச் சான்றிதழ் ஆறு ஆண்டுகளுக்கு முன்பே காலாவதியானதாக அதிகாரப்பூர்வ ஆவணங்கள் காட்டுகின்றன.
பேருந்து ஓட்டுநர் குடிபோதையில் இருந்ததால் தான் இந்த விபத்து நேர்ந்ததாகவும், பல குழந்தைகள் இதனால் படுகாயமடைந்துள்ளதாகவும் சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.