Page Loader
உடல் உறுப்பு தானம் பெறுவதற்கு தமிழகத்தில் 6,785 பேர் காத்திருப்பு: சுகாதாரத்துறை செயலாளர் தகவல்
உடல் உறுப்பு தானம் பெறுவதற்கு தமிழகத்தில் 6,785 பேர் காத்திருப்பு - சுகாதாரத்துறை செயலாளர்

உடல் உறுப்பு தானம் பெறுவதற்கு தமிழகத்தில் 6,785 பேர் காத்திருப்பு: சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

எழுதியவர் Nivetha P
Oct 13, 2023
01:47 pm

செய்தி முன்னோட்டம்

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று(அக்.,12) உடல் உறுப்பு தான விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. இதனை தலைமை நீதிபதியான எஸ்.வி.கங்காபுர்வாலா துவக்கி வைத்துள்ளார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு சுகாதாரத் துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி பங்கேற்று உரையாற்றியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, 'உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் ஸ்பெயின் நாட்டில் தான் அதிகளவு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. அதேபோல் இந்தியாவில் தமிழகத்தில் தான் அதிகளவு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் நடக்கிறது' என்றும், அதன்படி 'தமிழகத்தில் இதுவரை 36,472 பேர் தங்கள் உறுப்புகளை தானம் செய்வதற்கான உறுதிமொழி பத்திரத்தினை கொடுத்துள்ளனர்' என்றும் தெரிவித்தார்.

உரை 

'உடல் உறுப்பு தானம் செய்ய முன்வர வேண்டும்' - ககன்தீப்சிங் வேண்டுகோள் 

தொடர்ந்து பேசிய அவர், மாநிலம் முழுவதுமுள்ள 169 மருத்துவமனைகளில் உடல் உறுப்பு தானங்கள் பெறப்பட்டு தேவைப்படுவோருக்கு பொருத்தப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சைகள் 'விடியல்' என்னும் செயலி மூலம், வெளிப்படைத்தன்மை கொண்டே செய்யப்படுகிறது. இந்தாண்டில் மட்டும் 128 நன்கொடையாளர்களால் 733 பேர் பயனடைந்துள்ளனர். மேலும், 6,205 பேர் சிறுநீரகத்திற்கும், 62பேர் நுரையீரலுக்காகவும், 75 பேர் இதயத்திற்காகவும், 443 பேர் கல்லீரலுக்காகவும் என மொத்தம் 6,785 பேர் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பெறுவதற்கு காத்திருக்கிறார்கள் என்றும் ககன்தீப் சிங் விவரித்துள்ளார். உடல் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச்சடங்கு, அரசு மரியாதையுடன் நடக்கும் என்று முதல்வர் அறிவித்துள்ள நிலையில், அதன் முக்கியத்துவத்தினை உணர்ந்து பலரும் உடல் உறுப்பு தானம் செய்ய முன்வரவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.