கேரளாவில் நிபா வைரஸ்: 5 பேருக்கு பாதிப்பு உறுதி, தொடர்பு பட்டியலில் 700 பேர்
சென்ற வாரத்தில், கேரளாவின் கோழிக்கோட்டில், 24 வயதான சுகாதாரப் பணியாளர் ஒருவருக்கு நிபா வைரஸ் இருப்பது முதல்முதலில் கண்டறியப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, இருவர் மரணமடைந்துள்ளனர், மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக நேற்று கூறப்பட்டது. தற்போது கேரளா மாநிலத்தில் மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது. அதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளில், 706 பேர் தொடர்பு பட்டியலில் உள்ளனர் என்றும், 77 பேர் அதிக ஆபத்தான பிரிவில் உள்ளனர் என்றும், இவர்களுள் 153 பேர் சுகாதாரப் பணியாளர்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. 13 பேர் தலைவலி போன்ற லேசான அறிகுறிகளுடன் தற்போது மருத்துவமனையில் கண்காணிப்பில் உள்ள நிலையில், அதிக ஆபத்துள்ள தொடர்புகளை அவர்களது வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு கேரளா அரசு அறிவுறுத்தியுள்ளது.
கேரளாவில் விதிக்கப்பட்டுள்ள தடைகள்
நிபா வைரஸ் பரவலை அடுத்து, கோழிக்கோடு நகரில் திருவிழாக்கள், சமூக நிகழ்ச்சிகளுக்கு பொதுமக்கள் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 7:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் மருந்தகங்கள் மற்றும் சுகாதார மையங்களுக்கு நேரக் கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை. கோழிக்கோடு வடகரா தொகுதியில் உள்ள ஒன்பது பஞ்சாயத்துகளில், 58 வார்டுகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார். வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் முயற்சிகளை ஒருங்கிணைக்க கேரள அரசு 19 முக்கிய குழுக்களை அமைத்துள்ளது. தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்க தன்னார்வக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.