தமிழகத்தில் 5ஜி சேவை: 6 நகரங்களில் தொடக்கம்
5ஜி சேவை நேற்று தமிழகத்தின் 6 நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. மதுரை, திருச்சி, சேலம், ஒசூர், கோவை, வேலூர் ஆகிய நகரங்களில் இனி 5ஜி சேவை கிடைக்கும். தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் நீரஜ் மிட்டல் ஐஏஎஸ் முன்னிலையில் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் டி.மனோ தங்கராஜ் நேற்று(ஜன:12) கோவையில் இதனை தொடங்கி வைத்தார். இந்த வருடத்திற்குள் தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் கிராமங்களிலும் ஜியோ 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில் முனைவோருக்கு ஊக்கம் அளிக்கும்
"தமிழகத்தில் ஜியோவின் ட்ரூ 5ஜி சேவையை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன். 5ஜி சேவைகள் நீண்ட காலத்திற்கு தமிழக மக்களுக்கு மாற்றத்தக்க பலன்களைத் தரும். தமிழக அரசு தொழில் முனைவோர் அமைப்பில் சிறப்பு கவனம் செலுத்துகிறது, மேலும், மாநிலத்தில் 5G சேவைகளின் வருகை IoT, ப்ளாக்செயின், AI, மெஷின் லேர்னிங் போன்ற புதிய தொழில்நுட்பங்களில் பணிபுரியும் தொழில் முனைவோருக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும்." என்று அமைச்சர் டி.மனோ தங்கராஜ் இந்த நிகழ்ச்சியில் கூறி இருக்கிறார். "விரைவில், ஜியோ ட்ரூ 5ஜி நெட்வொர்க் தமிழகம் முழுவதும் கிடைக்கும். டிசம்பர் 2023க்குள், தமிழகத்தின் ஒவ்வொரு கிராமமும் நகரமும் ஜியோவின் ட்ரூ 5ஜி சேவைகளைப் பெறும்." என்று ஜியோ நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.