உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசத்தில் கனமழை சீற்றம்: 54 பேர் பலி
இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் இடைவிடாத மழை பெய்து, நிலச்சரிவுகளை ஏற்படுத்தியதால், அம்மாநிலங்களில் உள்ள முக்கிய சாலைகள், நெடுஞ்சாலைகள், வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் உள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. மேலும், இதனால், குறைந்தது 54 பேர் கொல்லப்பட்டனர். அந்த 54 பேரில் 51 பேர் இமாச்சல பிரதேசத்தில் மட்டும் உயிரிழந்துள்ளனர். சிம்லாவில், இரண்டு நிலச்சரிவுகள் ஏற்பட்டது. சம்பவம் நடந்த இடங்களில் இருந்து 14 உடல்கள் மீட்கப்பட்டன. மேலும், சம்மர் ஹில் பகுதியில் உள்ள சிவன் கோயிலின் இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்று அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.
சுதந்திர தின கொண்டாட்டங்கள் முடக்கம்
புனிதமான சாவான் மாதத்தின் ஒரு முக்கியமான நாளில் பிரார்த்தனை செய்வதற்காக பலர் அந்த சிவன் கோயிலுக்கு சென்றிருந்த போது, அது கடும் மழையால் இடிந்து விழுந்தது. இந்த கனமழையால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள மற்றொரு மாவட்டமான சோலனில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உட்பட 11 பேர் கொல்லப்பட்டனர். இமாச்சலின் ஒன்பது மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. கனமழையால் சிம்லாவில் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்து மின் கம்பிகளை சேதப்படுத்தியதால், ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் அம்மாநிலத்தின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இமாச்சலில் பெய்து வரும் கனமழை காரணமாக, மாநிலம் முழுவதும் சுதந்திர தின கொண்டாட்டங்கள் முடக்கப்பட்டுள்ளன.