தமிழகத்தில் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் 500 மீட்புப்படையினர், 1100 தீயணைப்பு வீரர்கள்
வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வரும் 3ம்.,தேதி புயலாக மாறவுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இப்புயலால் அதிகளவு பாதிப்பு ஏற்படக்கூடும் மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து தமிழக பேரிடர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் உஷார் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பேசியுள்ள பேரிடர் கட்டுப்பாடு மைய அதிகாரி, 'மழையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை ஏதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம்' என்று தெரிவித்துள்ளார். மேலும் , '24 மணிநேரமும் செயல்படக்கூடிய அவசரகால செயல்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. முதல்வர் உத்தரவுப்படி மக்களின் அளிக்கும் புகார்களுக்கு உடனடி தீர்வுகாணும் வகையில் 100க்கும் மேற்பட்ட அதிகாரிகளும் ஊழியர்களும் தயாராக உள்ளனர்' என்றும் கூறியுள்ளார்.
புயல் பாதிப்புகளை சீர் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்
'புயல் பாதிப்புகளை உடனடியாக சீர் செய்வதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளது' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதனை தொடர்ந்து அவர், தமிழகத்தில் பேரிடர் மீட்பு படையினர் 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு 250 ஊழியர்கள் கொண்டு செயல்படுகின்றனர். அதே போல் 9 குழுக்களாக பிரிக்கப்பட்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் 250 ஊழியர்கள் கொண்டு செயல்பட்டு வருகிறார்கள். இதன் மூலம் 500 பேரிடர் மீட்பு படையினர் புயல் பாதிப்புகள் ஏற்படும் மாவட்டங்களுக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட தயார் நிலையில் உள்ளனர் என்று கூறியுள்ளார். இதற்கிடையே சென்னையில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை சீர் செய்ய சென்னையில் செயல்பட்டு வரும் 43 தீயணைப்பு நிலையங்களில் பணிபுரியும் 1100 தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.