சத்தீஸ்கர் தாக்குதல்: உயிரிழந்த 10ல் 5 போலீஸார் மாவோயிஸ்டுகளாக இருந்தவர்கள்
சத்தீஸ்கரில் உள்ள தண்டேவாடா மாவோயிஸ்ட் தாக்குதலில் கொல்லப்பட்ட பத்து காவல்துறை அதிகாரிகளில் 5 பேர் முன்பு மாவோயிஸ்டுகளாக செயல்பட்டவர்கள் என்றும், அவர்கள் நல்ல வாழ்க்கைக்காக காவல் படையில் சேர்ந்தனர் என்றும் மூத்த அதிகாரி ஒருவர் நேற்று(ஏப்-27) தெரிவித்தார். கடந்த புதன்கிழமை, சத்தீஸ்கரின் தண்டேவாடா மாவட்டத்தின் அரன்பூர் காவல் நிலையப் பகுதியில் பாதுகாப்புப் படையினரின் வாகனம் ஒன்றை மாவோயிஸ்டுகள் சக்திவாய்ந்த வெடிகுண்டைப் பயன்படுத்தி வெடிக்கச் செய்ததில், ஒரு டிரைவரும் 10 மாவட்ட ரிசர்வ் காவல்(DRG) வீரர்களும் உயிரிழந்தனர். உயிரிழந்த வீரர்களில் ஹெட் கான்ஸ்டபிள் ஜோக சோடி(35), ஹெட் கான்ஸ்டபிள் முன்னா கட்டி(40), கான்ஸ்டபிள் ஹரிராம் மாண்டவி(36), கான்ஸ்டபிள் ஜோகா கவாசி(22), ரகசியப் படை ராஜுராம் கர்தம்(25) ஆகியோர் முன்பு மாவோயிஸ்டுகளாக இருந்தவர்கள் ஆவர்.
பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல தலைவர்கள் கண்டனம்
உயிரிழந்த இந்த 5 பேரும் ஒரு காலத்தில் மாவோயிஸ்டுகளாக இருந்தவர்கள். பின்னர், சரணடைந்து காவல்துறையில் சேர்ந்தனர் என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல்(பஸ்தர் ரேஞ்ச்) சுந்தர்ராஜ்.பி தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிற தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். வீரமரணம் அடைந்த வீரர்களின் தியாகங்கள் என்றும் நினைவுகூரப்படும் என பிரதமர் மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் காவல்துறை மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலால் மிகவும் வேதனையடைந்துள்ளதாகவும், மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேலும் இந்த தாக்குதலுக்கு வருத்தம் தெரிவித்திருந்தார்.