சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 10 போலீசார் பலி
செய்தி முன்னோட்டம்
சத்தீஸ்கரின் பஸ்தார் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 10 போலீசார் உயிரிழந்தனர். இந்த தாக்குதலால் ஒரு ஓட்டுநரும் உயிரிழந்திருக்கிறார்.
அவர்களின் வாகனம் மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டு சாதனத்தால்(IED) தகர்க்கப்பட்டது.
மாவோயிஸ்ட் எதிர்ப்பு நடவடிக்கையிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்திருக்கிறது.
உளவுத்துறையிடம் இருந்து கிடைத்த தகவலை அடுத்து இந்த மாவோயிஸ்ட் எதிர்ப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது.
உயிரிழந்த போலீஸார், சத்தீஸ்கர் காவல்துறையின் சிறப்புப் மாவட்ட ரிசர்வ் காவலர்(DRG) படையைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
மாவோயிஸ்டுகளை எதிர்த்துப் போராடுவதற்கு சிறப்பு பயிற்சி பெற்ற உள்ளூர் பழங்குடியின வீரர்களை கொண்ட காவலர் படை இதுவாகும்.
இடதுசாரி தீவிரவாதத்தின் மையமான பஸ்தார் மாவட்டத்தில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான பல நடவடிக்கைகளை இந்த DRG காவல்படை வெற்றிகரமாக முடித்துள்ளது.
DETAILS
DRG வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்: சத்தீஸ்கர் முதல்வர்
"தண்டேவாடாவின் அரன்பூர் காவல் நிலையப் பகுதியில் மாவோயிஸ்ட் கேடர் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைக்காக அங்கு சென்ற DRG படையை குறிவைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 10 DRG வீரர்கள் மற்றும் ஒரு ஓட்டுநர் வீரமரணம் அடைந்தனர் என்ற செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. அவர்களின் குடும்பத்தாரின் துயரத்தில் பங்கு கொள்கிறோம். அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும்." என்று சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் ட்வீட் செய்துள்ளார்.
1967ஆம் ஆண்டு முதல், நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகக் கருதப்படும் நக்சல்கள், மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவில் உள்ள பரந்த நிலப்பரப்பின் மீது கட்டுப்பாட்டை கொண்டுள்ளனர்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் இருந்து விடுபட்ட ஏழைகளுக்காக தாங்கள் போராடுவதாக அவர்கள் கூறி வருகிறார்கள்.