போலி NRI சான்றிதழ் விவகாரம்: சிக்கலில் 44 மருத்துவர்கள்; சட்ட நடவடிக்கை எடுக்க பரிந்துரை
போலி NRI சான்றிதழ் வழங்கி மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க, மருத்துவ மாணவர் சேர்க்கை குழு பரிந்துரை செய்துள்ளது. மருத்துவ மாணவர் சேர்க்கையின் ஒரு பகுதியான சான்றிதழ்களின் ஆய்வின் போது, நடப்பாண்டில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான இடஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்திருந்த 6 பேரின் தூதரக சான்றிதழ்கள் போலியானவை என்பது கண்டறியப்பட்டது. அதில் 3 பேர் எம்பிபிஎஸ் இடங்களுக்கான ஒதுக்கீடு பெற்றவர்களாவர். இதையடுத்து 6 பேரும் மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்பதில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டுமன்றி அவர்களில் மூவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட எம்பிபிஎஸ் இடங்களும் ரத்து செய்யப்படுள்ளது. போலியாக சான்றிதழ் அளித்த 6 மாணவர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்கு சட்ட ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது.
Twitter Post
முதுகலை மாணவர்களும் போலி NRI சான்றிதழ் விவகாரத்தில் சிக்கியுள்ளனர்
முதுகலை மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தற்போது தொடங்கியுள்ள நிலையில், அந்த விண்ணப்பங்களை ஆய்வு செய்ததில் 44 மாணவர்கள் போலி NRI சான்றிதழ் அளித்தது கண்டறியப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் சட்ட நடவடிக்கை எடுக்க, மருத்துவ கல்வி இயக்குனரகம், முதுநிலை மருத்துவ சேர்க்கை குழு மற்றும் சட்ட வல்லுனர்களுக்கு பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த 44 மாணவர்களும் இளநிலை மருத்துவ படிப்பில் எம்.பி.பி.எஸ் முடித்தவர்கள் என்பதால், அவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை, குற்றவியல் நடவடிக்கை அல்லது மருத்துவ கலந்தாய்வின் மூலம் சேர்வதற்கான தீர்வு, சட்ட வல்லுநர்களின் பரிந்துரையின் அடிப்படையில் முடிவு செய்யப்படும் என மருத்துவ கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.