உத்தரகாண்டில் மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களும் IAF விமானத்தில் ரிஷிகேஷ் மருத்துவமனைக்கு பயணம்
17 நாட்களுக்கு பிறகு உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் உள்ள சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்களும் நேற்று பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில், அவர்கள் இன்று இந்திய விமானப்படை(IAF) விமானத்தின் உதவியோடு எய்ம்ஸ் ரிஷிகேஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 4.5 கிமீ நீளம் கொண்ட சில்க்யாரா சுரங்கப்பாதையின் ஒரு பகுதி நவம்பர் 12 அன்று இடிந்து விழுந்தது. அந்த சமயத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளர்கள் அந்த சுரங்கப்பாதைக்குள்ளேயே சிக்கி கொண்டனர். பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தின் லட்சிய திட்டங்களில் ஒன்றான சார் தாம் யாத்திரை பாதையின் ஒரு பகுதியாக இந்த சுரங்கப்பாதை கட்டப்பட்டு வந்தது. இந்நிலையில், 17 நாளாக நடந்து வந்த துளையிடும் பணி நேற்று இரவு 7 மணியளவில் முடிவடைந்தது.
தொழிலாளர்கள் அனைவரும் நலமாக இருக்கின்றனர்
அதன் பிறகு, தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புப் படை அதிகாரிகள் சிக்கியிருந்த ஒவ்வொருவரையும் ஸ்ட்ரெச்சரில் வைத்து வெளியே இழுத்தனர். அதனை தொடர்ந்து, இன்று அந்த 41 தொழிலாளர்களும் இந்திய விமானப்படையை(IAF) சேர்ந்த சினூக் ஹெலிகாப்டரின் உதவியோடு எய்ம்ஸ் ரிஷிகேஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தொழிலாளர்கள் யாருக்கும் வெளிப்புற காயங்கள் ஏற்படவில்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், மருத்துவ சோதனைகளை முன்கூட்டியே முடித்துவிடுவது மிகவும் நல்லது என்று மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். இதற்கிடையில், சீனியலிசூர் மருத்துவமனையில் வைத்து தொழிலாளர்களை சந்தித்த உத்தரகாண்ட் முதல்வர் தாமி, தொழிலாளர்கள் அனைவரும் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.